பழங்குடியின மக்கள் வளர்ச்சிக்கு முன்னுரிமை: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பலன் நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, வளர்ந்த இந்தியா சபத யாத்திரை (விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா) நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் மருத்துவ காப்பீடு, விவசாயிகள் நிதியுதவி திட்டங்களில் பொதுமக்கள் இணைந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 15-ம்தேதி தொடங்கப்பட்ட இந்த சபத யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் பயனாளிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளூர் பிரதிநிதிகள் ஊரில் இருந்தபடியே பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்ட கிராமத்தின் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பூமிகா புவராயாவுடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது, “என்னுடைய கிராமத்தில் உள்ள 29 ‘வன் தன்’ சுயஉதவிக் குழுக்களில் ஒன்றின் செயலாளராக உள்ளேன். உஜ்வாலா காஸ் இணைப்பு, ஜல் ஜீவன், 100 நாள் வேலை, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி உள்ளிட்ட திட்டங்களால் பயனடைந்துள்ளேன்” என்றார்.
அரசின் பல்வேறு திட்டங்கள்குறித்த பூமிகாவின் விழிப்புணர்வால் ஈர்க்கப்பட்ட பிரதமர், இது மக்களுக்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது என்று கூறினார். தனது சுயஉதவிக் குழு மூலம்மஹ்வா லட்டு மற்றும் நெல்லிக்காய் ஊறுகாய்களை உற்பத்தி செய்வதாகவும் அவற்றை ஒரு கிலோரூ.700-க்கு விற்பனை செய்வதாகவும் பூமிகா பிரதமரிடம் தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடி கூறும்போது, “பழங்குடியின பகுதிகளில் வசிக்கும் மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது” என்றார். மேலும் ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் 102 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க கூட்டுறவு குழுமத்தின் உறுப்பினருமான சயீத் க்வாஜா முய்ஹுதீன் உடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, விவசாயிகள் ஒன்றிணைந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அமைப்பை நடத்துவதற்காக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
அப்போது, “இப்போதைய அரசின் முயற்சி காரணமாக, வேளாண் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் விளைபொருள் சேமிப்பு கிடங்கு கட்ட நபார்டு எங்கள் குழுமத்துக்கு ரூ.3 கோடி கடன் வழங்கியது. இது விவசாயிகளுக்கு பேருதவியாக உள்ளது” என முய்ஹுதீன் தெரிவித்தார். இதுபோல மேலும் பல்வேறு பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.