பரதன் பதில்கள்

திருப்பதி மலை மீது நடந்து படியேறி சுவாமி தரிசனம் செய்வதற்கும் பஸ் மூலம் செல்வதற்கும் பலன்களில் வித்தியாசம் உண்டா?

– வே. கங்காதரன், திருப்பூர்

நம்ம உடலை வருத்தி சுவாமி தரிசனம் செய்யும் சுகமே அலாதியானதுதான். அதற்காக படிக்கட்டில் ஏறி வந்தால் கூடுதல் பலன் என்பதெல்லாம் கிடையாது. உங்களால் எப்படிச் செல்ல முடியுமோ அப்படிச் செல்லுங்கள். பலனை எல்லாம் நீங்கள் தீமானிக்காதீர்கள். அதை வெங்கடாஜலபதி தீர்மானிப்பார்.

பரதனாரே… ஜனவரி 1 புத்தாண்டு எப்படிக் கழிந்தது?

– கிரிஜா சங்கர், ஆவடி

நீங்கள் கடந்த வாரம் விஜயபாரதம் படிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஜனவரி 1 நமக்குப் புத்தாண்டு இல்லை. அது ஆங்கிலேயருக்கும் கிறிஸ்தவருக்கும் புத்தாண்டு. விஜயபாரத அலுவலகத்தில் 2015 காலண்டருக்குப் பதில் 2016 காலண்டர் மாறியது. அவ்வளவுதான் நமக்கு விசேஷம்.

* பெண்கள் வீட்டில் சமையல் செய்துகொண்டே மனதில் சுலோகங்களைச் சொல்லலாமா?

– எஸ். குணசேகரன், கணக்கப்பட்டி

தாராளமாகச் சொல்லலாம். கபீர்தாசர் தறி நெய்தபடியேயும் மகாத்மா காந்திஜி ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டேயும் ராம நாம ஜபம் செய்து வந்தார்கள்.

போகிப் பண்டிகை அன்று கூட மாணவர்களுக்கு தேர்வு இருப்பது பற்றி?

– செ. மாணிக்கவாசகம், அறந்தாங்கி

கிறிஸ்துமஸுக்கு 9 நாள் லீவு. பொங்கலுக்கு ஒரு நாள் லீவு. ஊருக்கு இளைத்தவன் ஹிந்து தானே… வாழ்க மதச்சார்பின்மை.

காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பற்றி கொச்சையாகப் பேசியுள்ளாரே?

– ராஜேஸ்வரி சேகர், விருத்தாசலம்

இளங்கோவனுக்கு நாக்கில் சனி. காங்கிரசை அழிக்காமல் விடமாட்டார் போலிருக்கு. டாக்டர் தமிழிசை தமிழகமே qaஅறிந்த குமரி அனந்தனின் மகள், மரியாதைக்குரிய குடும்பம், இளங்கோவன் அவர்களே… யாகாவராயினும் நாகாக்க என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* சகாயம் (ஐஏஎஸ்) அரசியலுக்கு வருவாரா?

– வி. கருப்பையா, ஆராவயல்

சகாயம் நல்ல மனிதர் தான். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று சமீபத்தில் இளைஞர்கள் சென்னையில் ஒரு ஊர்வலம் நடத்தியுள்ளனர். நேர்மை என்ற முகமூடிக்குப் பின்னால் கிறிஸ்தவ மிஷனரிகளின் சதி இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. ஏற்கனவே உமாசங்கர் (ஐஏஎஸ்) கிறிஸ்தவ பிரச்சார பீரங்கியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜாக்கிரதை.

விஜயகாந்தை மையமாக வைத்தே தமிழக அரசியல் களம் சுற்றுகிறதே?

– ஜெ. ரங்கநாதன், திருச்செங்கோடு

ஆமாம். பாஜக மக்கள் நலக் கூட்டணி உடன் பேசிக்கொண்டு வருவது திமுகவுடன் பேரத்தை கூட்டுவதற்காகவே. திமுகவுடன் தான் கூட்டணி சேருவார் என்றே தோன்றுகிறது. ஆனால் இனி திமுக – அதிமுக அல்லாத ஆட்சி என்று முழங்க முடியாது. காங்கிரஸுக்கு ஏற்பட்ட சதிதான் தேமுதிகவுக்கும்.