பத்திரிகைகளில் உண்மையில் சமரசம் கூடாது

டெல்லி இந்திரபிரஸ்தா விஸ்வ சம்வத் கேந்திராவின் 12வது தேவரிஷி நாரதர் பத்திரிக்கையாளர் விருது வழங்கும் விழா 2022, கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் உள்ள சபாநாயகர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில்,  முன்னாள் ஆசிரியர் பல்பீர் பஞ்ச், நுபுர் ஜே. சர்மா, ஓபிண்டியாவின் நுபுர் ஜே. சர்மா, பஞ்சாப் கேசரியை சேர்ந்த மிஹிர் சிங், ஹிந்துஸ்தான் சமாச்சாரின் அசுதோஷ் குமார் பாண்டே உட்பட பல்வேறு பிரிவுகளில் 12 பத்திரிகையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  இவ்விழாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரதிய பிரச்சார பிரமுகரான சுனில் அம்பேகர் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர், “மற்ற தொழில்களைப் போலல்லாமல், திறமைக்கும் அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் பத்திரிகைகளில், ஒருவரின் நேர்மையும் மதிக்கப்படுகிறது. நாம் யாருக்கு பயிற்சி கொடுக்கிறோமோ அவர் அதை ஏற்றுக்கொள்ளும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். தனக்குக் கொடுக்கப்படும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் திறன் அவருக்கு இருக்க வேண்டும். அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாமல் சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும். மகரிஷி நாரதர், பத்திரிகையின் சக்தியின் அடையாளம். பத்திரிகைகள் உண்மையுடன் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. அதில் பொதுநலன்தான் முதன்மையாக இருக்க வேண்டும். பொறுப்பான பத்திரிக்கையின் தேவை மிக அதிகம். செய்திகளை வழங்குவதோடு, அதற்கான தீர்வையும் சொல்லி அதன் வழியைக் காட்டுவார் மகரிஷி நாரதர். நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் செய்தித்தாள்களை மக்கள் விழிப்புணர்வின் ஊடகமாக ஆக்கினார்கள். அந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள்தான் நமது பத்திரிகையின் இலட்சியமாக இருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பத்தை கண்டு நாம் பயப்பட தேவையில்லை. தொழில்நுட்ப அதிர்ச்சிகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன, அது தொடர்ந்து நடக்கும்” என பேசினார்.