பசுப் பாதுகாப்புக்கான நாடுதழுவிய விழிப்புணர்வு தேசத்திற்கு தமிழர்கள் தந்த கொடை!

சமீபத்தில் பாஜக ஆட்சி செய்யும் பல மாநிலங்களில். உரிமம் பெறாத பசுக் கொலைக் கூடங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பசுவதையை தடுக்கக் கோரி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபா உறுப்பினருமான இல. கணேசன் விஜயபாரதத்திடம் பேசியதிலிருந்து:

உத்தரப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர்  மாகாணங்களில் பசுவதை செய்வோருக்குத் தூக்கு, ஆயுள் தண்டனை எனக் கடுமையான சட்டங்களை இயற்றுகிறார்களே! இது சரியா? இது பற்றித் தங்கள் கருத்து என்ன?

செயலிலே காட்ட வேண்டும் என முனைந்திருப்பவர் யோகி ஆதித்யநாத் அவர்கள். அது தான் முக்கியமானது. இந்த அரசு எந்தத் திசையில் செல்லும் என்பதை ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே அறிவித்தது தான் உ.பி. முதலமைச்சரது சிறப்பான அம்சம். என்னைப் பொறுத்த வரையில் அதிகாரம் கையில் இருப்பவர்கள் அமைதியாக, அதே நேரத்தில் அழுத்தமாகத் தன்னுடைய கொள்கையை நிறைவேற்றுவது தான் சிறந்தது.

உலகிலேயே அதிகமாகப் பசு மாமிசம் ஏற்றுமதி செய்வது நம் நாடு தான். ஒரு பக்கம் ஏற்றுமதியும் செய்து கொண்டு, மறு பக்கம் பசு வதைத் தடைச் சட்டம் போடுவது சரி தானா?

முதலில் இந்தத் தேசத்திற்கு என்று ஒரு (தனித்) தன்மை இருக்கிறது. பசுக்களை மதிப்பது. பசுவையும் பசு இனத்தையும் கொல்லக் கூடாது என்பதற்காகவும் பசுவதைக்கு எதிராகத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும் ஜனசங்க காலத்தில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்து வருகிறது.

இது தொடக்கம். உத்தரப் பிரதேசத்தில் வெளியிடப்பட்டிருக்கிற ஆணை என்பது, சட்ட ரீதியாக அல்லாமல், சட்ட விரோதமாக இயங்கும் இறைச்சிக் கூடங்களை மூடுவது தான். ‘அதன் காரணமாக பக்கத்து மாநிலங்களில் இறைச்சி கிடைக்காமல் பாதிக்கும். இத்தனைத் தொழிலாளர்களுக்கு வேலை போய்விடும், மக்களுக்கோ அரசாங்கத்துக்கோ மொத்த வருமானம் குறைந்து போகும்’ என்றெல்லாம் கணக்கிட்டுச் சொல்கிறார்கள் என்றால் என்ன பொருள்? சட்ட விரோதமான இந்தச் செயலை காலம் அனுமதித்து வந்திருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

கேரளத்தில் மலப்புரம் இடைத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் தரமான பசு மாமிசம் தருவேன் என உறுதி அளித்திருக்கிறாரே!

கேரளத்தைப் பொறுத்தவரையில் மாட்டிறைச்சியையோ, கொலைக் கூடங்களையோ தடுக்கும் அதிகாரம் நமக்கில்லை. ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கோ பசுவதையைத் தடுப்பதிலோ, மற்ற அம்சங்களிலோ நம்பிக்கை இல்லை.

இவர் அந்தப் பகுதியிலே வேட்பாளராக வெற்றி பெற்ற பிறகு, யார் இறைச்சியை விரும்பி உண்கிறார்களோ அவர்களுக்குப் பசு இறைச்சி அல்ல; மாட்டிறைச்சி சுகாதாரமாகக் கிடைக்க வழி செய்வேன் எனச் சொல்லி இருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் சட்ட விரோதமான இறைச்சிக் கூடங்களைத் தடுப்பது யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு முதல் படியாக அமைந்திருப்பது போல, சுகாதாரமற்ற இறைச்சிக் கூடங்களைத் தடுப்பது தான் கேரளத்தில் முதல் கடமை என்பதாக அவர் சொல்லி இருக்கலாம். படிப்படியாகத் தான் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க முடியும்.

வீட்டுக்கு ஒரு பசு வளர்ப்பது சாத்தியம் தானா?

சாத்தியமில்லை. வீட்டுக்கு வீடு ஒரு கழிப்பறை என்பது தான் அரசின் இலக்காக இருக்கிறது. அது தான் சாத்தியம். தற்சமயம் அதுவே இன்னும்  சாத்தியம் ஆகிடாத நிலையில் மாடு வளர்ப்பது எப்படி என்பது தான் முக்கியக் கேள்வியாக இருக்கிறது. குறைந்த பட்சம் இது குறித்து விழிப்புணர்ச்சி உண்டாக்க வேண்டும். வீட்டுக்கு வீடு என்றில்லாமல் பேட்டைக்குப் பேட்டை மாட்டுத் தொழுவம் என்பது கோஷமாக இருக்குமானால் அது நடைமுறை சாத்தியம்.

பசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்தது எப்படி?

ஆச்சரியமான செய்தி என்னவென்றால், நாட்டு மாடு, அதனுடைய பால், அதன் மகத்துவம் என விரிவாகக் குறிப்பிட்டு திமுக உறுப்பினர் திருச்சி சிவா ஒரு மசோதாவை முன் வைத்தார். அதன் தொடர்ச்சியாகப் பேசும்போது தான் நான் இதையும் வலியுறுத்திச் சொன்னேன்.

இந்த நாட்டில் நாட்டு நாய்கள் குறைந்து வருகின்றன; நம் நாட்டுக் குதிரைகள் குறைந்து விட்டன; நம் நாட்டு மாடுகள் குறைந்து விட்டன. நம் நாட்டு விதையினங்கள் குறைந்து விட்டன. ஒவ்வொன்றாக இப்படிக் குறைந்து வந்தால் நாம் மட்டும் எப்படி இந்திய ரத்தத்துடன் இருப்பதாகச் சொல்லிக் கொள்ள முடியும் எனக் கேட்டேன்.

பசுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பரவலாகி உள்ளதா? எவருக்கும் காளைகளைப் பற்றிக் கவலை இல்லையா?

பசு என்றாலே பசு, காளை உள்ளிட்டப் பசு இனம். ஒரு தீய விஷயத்தில் இருந்து சில நல்ல விஷயங்களும் கிடைக்கும் என்பதை ஆங்கிலத்தில் “ஞடூஞுண்ண்டிணஞ் டிண ஞீடிண்ஞ்தடிண்ஞு” எனச் சொல்வார்கள். ஒரு நல்ல விஷயத்தில் இருந்தே இன்னொரு நல்ல விஷயம் கிடைக்கிறது என்றும் கொள்ளலாம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் மிகப் பெரிய போராட்டம் நடந்தது என்பதும், அதன் பெயர்  மெரினா போராட்டம் என்பது நாம் நன்றாக அறிந்த அம்சம். அதனுடைய கூடுதல் லாபம் என்ன என்றால் தமிழக விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் நாட்டுப் பசுவின் அருமை புரிந்திருக்கிறது.

நாட்டுப் பசு எதற்காகத் தேவை என்பதையும் கூட நான் நாடாளுமன்றத்திலே பதிவு செய்தேன். ஜல்லிக்கட்டு என்ற ஒரு நாள் விழாவுக்காக மட்டும் காளைகள் பயன்படுவதல்ல. அந்த ஒரு நாள் தவிர்த்துப் பிற நாட்களில் அவை இனப் பெருக்கத்துக்காகப் பயன்படுகின்றன.

உம்பளாச்சேரி, புங்கனூர், காங்கேயம், ஓங்கோல் போன்ற நம் நாட்டு மாட்டு இனங்கள் காக்கப்பட வேண்டும். நாட்டுப் பசு இனத்தின் பாதுகாவலனாக ஜல்லிக்கட்டு திகழ்வதால் நாம் அதை வரவேற்கிறோம் என்று சொன்னோம். அதை இப்போது மக்களும் பரவலாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் மகிழ்ச்சிக்குரிய செய்தி.

நல்ல விஷயத்திற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தீர்கள். அதிலும் நல்ல விஷயமாக எதைப் பார்க்கிறீர்கள்?

நாடாளுமன்ற அவையில் நான் பேசி முடிக்கும் போது, நாட்டைக் காக்க வேண்டுமானால் மாட்டையும் காக்க வேண்டும்; அதற்குத் தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு மாடு கடத்தப் படுவதைத் தடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டேன். வியப்பு என்ன என்றால் அப்போது அவைத் துணைத் தலைவர் பி.ஜெ குரியன் அதை வரவேற்றுத் தனது கருத்தைப் பதிவு செய்தார் என்பது ஒரு நல்ல செய்தி. அவர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பது உபரி செய்தி.

முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் மோடி அரசை விமர்சிக்க முடியாத எதிர்க் கட்சிகள் வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததைப் போல இப்போது பசுப் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய மாநில பா.ஜ.க அரசுகளை விமர்சிக்கின்றனவே. இதற்கு நீங்கள் இடம் கொடுக்கலாமா?

உண்மையிலேயே இறைச்சி இறைச்சி எனச் சொல்லி வந்தாலும், உலக நாடுகளைப் பொறுத்த வரையில் கன்றுக்குட்டிகளின் மாமிசம் தான், அதிலும் குறிப்பாக பிறவாத கன்றுகளின் மாமிசம் தான் அதிக வரவேற்பைப் பெறுகிறது என ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் படித்தேன். மனதிற்கு அதிர்ச்சி தருவதாக இருந்தாலும் கூட அது தான் உண்மை.

கறவை அற்றுப்போன மாடுகளையே கொல்லக் கூடாது என நாம் குரல் கொடுத்து வருகிறோம். ஆனாலும் கூட கர்ப்பமாக இருக்கின்ற பசுக்களைக் கொன்று, அதன் வயிற்றைக் கிழித்து உள்ளே இருக்கும் சிசுக்களை உருவி அவற்றின் மாமிசத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கொலைக் கூடங்கள் அதிக அளவில் கேரளத்தில் இயங்கி வருகின்றன என்ற ஆபத்தை நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.எனவே நாட்டுப் பசு, காளை இனங்களைக் காக்க வேண்டும் எனத் தமிழர்கள் மத்தியில் வந்த விழிப்புணர்வு, அதையே ஊதிப் பெரிதாக்கி நாடாளுமன்றத்திலே வந்த விவாதம், அதையே ஊதிப் பெரிதாக்கி உத்தரப் பிரதேசத்தில் இயங்கி வந்த சட்ட விரோத கொலைக்களங்கள் என அனைத்தையும் மக்கள் மத்தியிலே எடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்தில் இப்போது வந்திருக்கிற இந்த உணர்வு நாடு முழுக்க எதிரொலிக்க வேண்டும்.

மாட்டிறைச்சியை ஒட்டு மொத்தமாகத் தடை செய்வது தான் ஒரே வழியா? மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு என்ன பதில்?

எந்த விதிக்கும் விதிவிலக்குகள் இருக்கும். ஏதோ ஒரு இடத்தில் வாழும் மலைவாழ் மக்கள் மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்பதற்காக இயற்கையை, விதியை நாம் மாற்றுவதற்கு இயலாது.

அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றிப் பின்னாலே யோசிப்போம். அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கே விதிவிலக்காகச் சில மக்கள் இருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் புரட்சியை விரும்புவதில்லை. மறுமலர்ச்சியைத் தான் விரும்புகிறது. பக்தி உடையார் காரியத்தில் பதறார்; மிகுந்த பொறுமையுடன் வித்து முளைக்கும் தன்மை போல் மெல்ல செய்து பயனடைவார்” என்பது பாரதி வாக்கு. அதே போல் நாம் எந்தக் காரியத்தையும் யாரும் நோகாமல், எந்த எதிர் விளைவுகளும் ஏற்படாமல், அதே நேரத்தில் கொள்கையில் குறியாக இருந்து இந்த நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நேர்காணல் : கரிகாலன்