நேர்மையை நேரில் பாராட்டிய ஆர்.எஸ்.எஸ்.

நவம்பர் 1, 2017 அதிகாலை 3.45 மணியளவில் சேலம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பின்னர் அங்கு  தலைச்சுமை கூலித் தொழிலாளியாக (போர்ட்டர்) வேலை செய்யும் பொய்யாமொழி என்பவர் அந்த நடைமேடையில் கேட்பாரற்றுக் கிடக்கும் பை ஒன்றைக் கண்டார். அதை எடுத்து திறந்து பார்த்தபோது அதனுள் 5,75,720 ரூபாய், துணி ஆகியவை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே தாம்பரம் ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் அளித்தார். ரயில் நிலைய அதிகாரி அதை உடனே எழும்பூர் ரயில் நிலையத்துக்கு தகவல் அனுப்பி, அந்த பையின் உரிமையாளரைக் கண்டுபிடித்து, தகவல் தெரிவித்து அந்தப் பையை அவரிடம் கிடைக்கும்படி செய்துள்ளார். பொய்யாமொழியின் நேர்மையைப் பாராட்டி, பையின் உரிமையாளர் அன்பளிப்பாக ஒரு தொகையை கொடுக்க முன்வரும்போது அதை வாங்க மறுத்த அவர், உரியவரிடம் பொருளை ஒப்படைப்பது தன் கடமை என்று கூறிவிட்டார். இதற்கு முன்பு கூட வீட்டைவிட்டு ஓடிவந்த சிறுவர்களை பொய்யாமொழி குடும்பத்துடன் சேர்த்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தாம்பரம் பகுதி ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் நேரில் சந்தித்து, அவரது நேர்மையை பாராட்டும் விதமாக பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

(தகவல் : ந. ஹேமந்த் குமார்)