நேரு செய்த பெருந்தவறுகளே காஷ்மீரின் வேதனைக்கு காரணம்

”பாகிஸ்தானுடனான போரின்போது, அவசர அவசரமாக போர் நிறுத்தம் அறிவித்தது; இந்தப் பிரச்னையை, ஐ.நா., சபைக்கு கொண்டு சென்றது என, இரண்டு மிகப் பெரும் தவறுகளை நேரு செய்ததே, காஷ்மீரின் இத்தனை வேதனைகளுக்கும் காரணம்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபாவில் நேற்று காட்டமாக தெரிவித்தார். ஜம்மு – காஷ்மீர் சட்டசபையில் புலம்பெயர்ந்த சமூகத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்த ஒருவரை நியமன உறுப்பினர்களாக நியமிக்கும், ஜம்மு – காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா மீது லோக்சபாவில் நேற்று விவாதம் நடந்தது.

இதைத் தவிர, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதில், சில பிரிவுகளின் பெயர்களை மாற்றுவது தொடர்பான மசோதா மீதும் விவாதம் நடந்தது.

போர் நிறுத்தம்

நேற்று முன்தினம் துவங்கிய இந்த விவாதம் நேற்றும் தொடர்ந்தது. மொத்தம், ஆறு மணி நேர விவாதத்துக்குப் பின், இந்த இரண்டு மசோதாக்களும் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதா மீதான விவாதத்துக்குப் பின் பதிலளித்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:

நேருவின் பெருந்தவறுகள் என்று இங்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை நான் ஆதரிக்கிறேன். நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் ஆட்சியின்போது, செய்யப்பட்ட இரண்டு பெருந்தவறுகளே, ஜம்மு – காஷ்மீரின் இத்தனை ஆண்டுகால வேதனைக்கு காரணம். பாகிஸ்தானுடனான போர் நடந்தபோது, நம் படைகள் வெற்றியை நோக்கி பயணித்து, பஞ்சாபைத் தாண்டியபோது, போர் நிறுத்தத்தை நேரு அறிவித்தார். இந்தப் பெருந்தவறே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாகக் காரணமானது.

போர் நிறுத்தத்தை அவர் அறிவித்திருக்கக் கூடாது. அப்படியே அறிவித்திருந்தாலும், இத்தனை பெரும் நிலப்பரப்பு கையைவிட்டு போகும் வகையில் அறிவித்திருக்கக் கூடாது. இல்லாவிட்டால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், தற்போது நம்முடைய எல்லைக்குள் இருந்திருக்கும்.

அடுத்த பெருந்தவறு, இந்த விவகாரத்தை, ஐ.நா.,வுக்கு அவர் கொண்டு சென்றதுதான். இந்த விவகாரத்தை ஐ.நா.,வுக்கு கொண்டு சென்றிருக்கவே கூடாது. போர் நிறுத்தம் அறிவித்தது என்னுடைய தவறு என, நேருவே கூறியுள்ளார். அது தவறல்ல, பெருந்தவறு. இதனால், நம் நாடு எவ்வளவு இழப்புகளை சந்திக்க நேர்ந்துள்ளது. இது வரலாற்று பெருந்தவறு. ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல் சாசனத்தின், 370வது பிரிவை நாங்கள் நீக்கினோம். சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக உறுதியளித்தோம்; அதை நீக்குவது உறுதியை மீறுவதாகாதா என்று கேட்கின்றனர்.

வெளிநடப்பு

சிறப்பு அந்தஸ்து என்பது தற்காலிக ஏற்பாடுதான். நீங்கள் ஓட்டு வங்கிக்காக, அதை நீக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்தீர்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, தைரியத்துடன் அந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கினார்.

இந்த இரண்டு மசோதாக்களும், ஜம்மு – காஷ்மீருக்கு மிகவும் முக்கியமானதாகும். கடந்த, 70 ஆண்டுகளாக நசுக்கப்பட்டு வந்தவர்களின் குரல்கள் இனி, சட்டசபையில் எதிரொலிக்கும். வரும், 2024 லோக்பா தேர்தலிலும் மோடியே பிரதமராக வருவார். வரும், 2026ம் ஆண்டுக்குள், வன்முறையில்லாத ஜம்மு – காஷ்மீரை உருவாக்கி காட்டுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நேரு குறித்து அமித் ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரத்துக்குப் பின், அவைக்கு மீண்டும் வந்தனர்.