நெசவை தவமாக்கிய அசாமியப் பெண்மணி ஜோதி போராதத்தா நூலிழை வழியே பக்தி, தேசபக்தி!

நெசவை தவமாக்கிய அசாமியப் பெண்மணி ஜோதி போராதத்தா

நூலிழை வழியே பக்தி, தேசபக்தி!

ராமாயணம், மகாபாரதம், சங்கரதேவ் இயற்றிய குணமாலா போன்ற புனித நூல்களின் பாடல்களையும், தேசபக்திப் பாடல்களையும் பாரத கலாச்சாரத்தின் ஊடும் பாவும் என்போம். இவற்றை உண்மையிலேயே ஊடும் பாவுமாக நெசவு செய்த சால்வை (கம்ச்சா என்னும் சிறு அங்கவஸ்திரம்) கிடைக்கிறது; அது யார் கைவண்ணம்? அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் வசிக்கும் ஜோதிபோரா தத்தா என்ற பாரம்பரிய நெசவாளர் குடும்பப் பெண்மணியின் கைவண்னமேதான்.

‘நூலை (கிரந்தங்களை) துணியில் நெய்யலாம்’ என எண்ணிய ஜோதியின் தவம் 2019ல் துவங்கியது. 7.32 மீட்டர் நீளமுள்ள சால்வையை கலைநயத்துடன் படைக்க 11 மாத காலம் எடுத்துக் கொண்டார். பின்னர் சங்கரதேவ், மாதவதேவ், கோபால தத்தா போன்ற மகான்களின் போதனைகள், பஜனைகள், அருள்வாக்குகள் தாங்கிய சால்வைகள் படைத்தார்.

பிரம்மாணடமாக அவர் நெய்த ‘ராம் விஜய்’ நாடக சால்வை 12.5 மீட்டர் நீளம். இதற்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தது. இதில் ராமர், சீதை காட்சியளித்து அருள்பாலிக்கிறார்கள்.

கண்ணன் கதைகள் சொல்லும் பாகவத புராணம் நெய்து முடிக்க 2022ல் ஒரு மாதம் ஆனது. 24 மணி நேரத்தில் 5 அடி நீள ‘கவசம்’ வஸ்திரம் உருவானதும் உண்டு. அனைத்தும் நாடு தழுவிய புகழ் பெற்றுத் தந்தது. தேசிய கீதம், அசாம் மாநில கீதம், வந்தே மாதரம் ஆகியவற்றை இருமொழிகளில் நெய்து  தன் தேசபக்தி முத்திரை பதித்தார் ஜோதி. இவை பாரத சாதனைகள் புத்தகத்தில் (India Book of Records) இடம் பெற்றன.

ஜோதியின் எந்தப் படைப்பும் விற்பனைக்கில்லை; அவை கலாசாரத்திற்கும் தேசத்திற்குமான அவரது சேவை மட்டுமே. அவரது சால்வைகள் பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

2023ல் ஜோதி, அம்பேத்கர் தேசிய விருதும் அசாம் அரசின் பாராட்டு சான்றிதழும் பெற்றார். தற்போது சங்கர தேவின் சீடர் மாதவதேவின் 186 ‘போர்கீத்’களை (கண்ணன் துதி) இருமொழிகளில் நெய்து வருகிறார்.

வடகிழக்கின் ஜோதி நெய்வது துணியை  மட்டும் அல்ல; பாரம்பரியத்தின் சாரத்தையே நூலிழை வழியே தருகிறார்.