முன்னுதாரணமான ஸ்வயம்சேவகர் ரங்கநாதன் ஜி

முன்னுதாரணமான ஸ்வயம்சேவகர்

ரங்கநாதன் ஜி

பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில் நீங்கள் சென்னையிலுள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் ‘சக்தி’ கார்யாலத்திற்கு சென்றிருந்தால் இவரை பார்த்திருக்கலாம். வயதானாலும் உற்சாகம் பளிச்சிடும். சொல்ல வேண்டிய விஷயத்தை நறுக்குத் தெறித்தாற்போல் சொல்பவர். அதே சமயம் எல்லோரிடமும் கனிவுடன், மரியாதையுடன் பழகுபவர். இப்படிப்பட்ட குணங்களுடன் பல ஆண்டுகளாக சக்தி கார்யாலயத்தில் வரவேற்பாளராக சேவை புரிந்தவர் நமது ரங்கநாதன்ஜி. அவரை சந்திப்போம்:

செங்கல்பட்டு மாவட்டம் துவண்டாகுளம் கிராமத்தில் 1928 ஆகஸ்ட் 10 அன்று கிருஷ்ணஸ்வாமி – ரங்கநாயகி தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் ரங்கநாதன். அப்பா மருந்து மாத்திரைகளைத் தயாரிக்கும் கம்பெனி ஒன்றின் டிவிஷனல் மானேஜர். அம்மா இல்லத்தரசி. ரங்கநாதன்ஜிக்கு இரண்டு தம்பிகள், மூன்று சகோதரிகள்; சகோதரர் கே.பார்த்தசாரதி புகழ்பெற்ற சென்னை போரூர் ராமச்சந்திரா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர். அடுத்து சம்பத்குமார் மெடிக்கல் துறையில் பணியாற்றியவர் (அவர் காலமாகிவிட்டார்). சகோதரிகள் மூவரில் சாந்தா அமெரிக்காவிலும், ஹேமா நியூசிலாந்திலும் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். மற்றொருவர் தங்கம் அவர் கலாமாகிவிட்டார். அவரது மகன் விஜயராகவன் ராமசந்திரா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார் அம்மாவின் சொந்த ஊரான மாயூரத்தில் ஆரம்பக் கல்வி முடித்த ரங்கநாதன் சென்னை வந்ததும் திருவல்லிகேணி ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

சிறுவயதிலேயே சேத்துப்பட்டில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தினசரி ஷாகா வரத் தொடங்கினார். யார் மூலம் அறிமுகம் என்று கேட்டபோது தனக்கு அப்போதெல்லாம் யாரும் அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை என்றும் தானாகவே ஷாகாவிற்கு அறிமுகமானாதாகவும் சொன்னார். ஒருமுறை மயிலாப்பூர் சித்திரைக் குளம் அருகே நடைபெற்ற சாங்கிக்கில் கலந்து கொள்ள நடந்தே சென்றார் சிறுவன் ரங்கநாதன். அதனால் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. பிரச்சாரக்காக இருந்த தத்தாஜி டிடோல்கர், பால ஸ்வயம்சேவகரான இவரிடம் ஷாகா டைம் என்ன என்று கேட்கிறார். அவர் காலை ஆறு மணி என்று பதில் சொல்கிறார். தற்போது டைம் என்ன என்று கேள்வி. ‘ஆறு பத்து’ என பதில். ஏன் தாமதம்? நடந்து வந்ததால் தாமதம். உடனே ஷாகா நடந்து கொண்டிருந்த மைதானத்தை மூன்று முறை சுற்றிவா என்று குறிப்பு வருகிறது. அதனை சிரமேற் கொண்டு சுற்றி வந்ததும் ஷாகாவின் தினசரி நடவடிக்கைகளில் உற்சாகமாகப் பங்கேற்கிறார்.

ஷாகா முடிகிறது. விடைபெறும் நேரம் எல்லோரும் சொல்லிக்கொண்டு தங்களது இல்லத்திற்கு புறப்படுகின்றனர். அப்போது தத்தாஜி ரங்கநாதனை அழைத்து ஒரு நீண்ட குச்சியை எடுத்து முதுகில் நான்கு அடி அடிக்கிறார். பின்னர் இனி ஷாகாவிற்கு தாமதமாக வரகூடாது என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். சிறுவனான ரெங்கநாதனுக்கோ அதிர்ச்சி, வலி. அதைவிட முதுகில் ரத்தம் கட்டி கோடுகளாக தெரியும் தழும்பை வீட்டினருக்கு தெரியாமல் மறைப்பது எப்படி, அதற்கு பதில் சொல்வது எப்படி என்ற கவலை. ஒருவழியாக தினமும் அணியும் சட்டையை ஒருவாரம் கழற்றாமல் சமாளித்தார். தொடர்ந்து ஷாகா வந்தார்.

சங்கப் பணிக்காக 1948ல் கடலூர் சென்றார். காந்தி கொலை செய்தி வந்தது. அப்போதைய காங்கிரஸ் அரசு சங்கத்தின் மீது பொய்ப்பழி சுமத்தி தடை செய்தது. ரங்கநாதன்ஜி கைது செய்யப்பட்டார். கல்லுரிப் படிப்பு முடிந்ததும் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்த சமயத்தில் 1954-–55ல் நிறுவனம் அவரை நாகபுரிக்கு மாற்றியது அங்கு பணிபுரியும் போது ஸ்ரீ குருஜி ஆலோசனையின் பேரில் அவர் சங்க கார்யாலத்திலேயே இரண்டு ஆண்டுக் காலம் தங்கி பணிபுரிந்துகொண்டே, அங்கு ஷாகாக்களிலும் பங்கு கொண்டார்.

பின்னர் சென்னை திரும்பியதும் 1957ல் ஜனவரி ௨௫ம் தேதி திருப்பதியில் தனது தாய்மாமாவின் மகள் பத்மாவை மணந்து கொண்டார். திருச்சியில் 15 ஆண்டுகள் வசித்தார். அப்போதும் சங்க வேலையிலும் தீவிரமாக பங்கேற்றுள்ளார். இவரது வீட்டிற்கு ஸ்ரீ குருஜி, அண்ணாஜி, ராம.கோபாலன்ஜி, சூரிஜி, உத்தமராஜ் ஜி என சங்கப் பெரியோர் பலர் வருகை புரிந்துள்ளார்கள். சங்கத்தின் மூன்றாண்டுப் பயிற்சி முகாம் முடித்துள்ளார். குழந்தைகள் இல்லை. மனைவியின் தம்பி பெண் அனிதா சந்தானத்தை தத்து எடுத்து வளர்த்தார்; எல்லா வசதி
களுடன் திருமணம் செய்து கொடுத்துள்ளார் (அவர்  தற்போது  மும்பையில்  வசித்து  வருகிறார்).

பணி ஓய்வுக்கு பின்னர் ரங்கநாதன்ஜி, பாரத் விகாஸ் பரிஷத் பணிகளிலும் சிவராம்ஜியின் நல்லோர் வட்ட பணிகளிலும் தீவிர ஈடுபாடு கொண்டார். சிவராம்ஜியின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். சென்னை கீழ்ப்பாக்கம் ராஜாஜி வித்யாஸ்ரமத்தில் நடைபெறும் தேசபக்திப் பாடல்கள் போட்டியை பாரத் விகாஸ் பரிஷத் நிர்வாகிகளுடன் திறம்பட நடத்தி வந்தார். புதன்கிழமைதோறும் நடைபெறும் வாராந்தர சந்திப்பிலும் உற்சாகமாக கலந்து கொள்வார். தனது வீட்டருகே உள்ள கிருஷ்ணர் கோயிலில் நடைபெறும் அனைத்து பூஜைகளிலும் விருப்பத்துடன் பங்கேற்பார்.

1993ல் சென்னை சக்தி கார்யாலய குண்டுவெடிப்பிற்கு பின்னர் அவர் கார்யாலயத்தின் தொலைபேசி அழைப்புகளைக் கையாளும் வேலை உள்ளிட்ட வரவேற்புப் பணியை மிகச் சிறப்பாக செய்து வந்தார். சத்யம், நேர்மை, பக்தி சிரத்தை, கடுமையான கட்டுப்பாடு, சங்க கொள்கையில் உறுதி என இந்த பணியினை ரங்கநாதன்ஜி ஒரு விரதமாகவே கருதி செய்து வந்தார். வாழ்நாளில் தனது அப்பாவின் திதி நாளை தவிர மீதி எல்லா நாட்களிலும்  கார்யாலயம் வந்துவிடுவார். சங்கம் சங்கம் என்றே தனது வாழ்க்கையை அமைத்து கொண்டவர். கார்யாலய பணியில் ஈடுபட்ட அந்த காலத்தில் ஒருநாள் கூட சங்க கார்யாலய உணவை சாப்பிட்டதே இல்லை. தனது வீட்டில் இருந்து மதிய உணவு எடுத்து வருவார். கண் பார்வை குறையத் தொடங்கியதும் தனது கர்யாலய வரவேற்பாளர் சேவையை நிறுத்திக் கொண்டார்.

தற்போது 97 வயதான ரங்கநாதன்ஜி கண்பார்வை குறைந்து சென்னை அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். நன்றாக பேசுகிறார்; 89 வயதான அவரது மனைவியும் அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இருவருமே தங்களது உதவியாளர்களின் துணையுடனும் சமுதாயப் பணிக்கே அர்ப்பணமான வாழ்க்கை தந்த அனுபவங்களின் நினைவுகளுடனும் வாழ்கிறார்கள்.