நாட்டின் சட்ட சிந்தனையை எதிர்காலத்திற்கு வழி நடத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக FOTLAWS (Forum of Tamil Nadu Law Students) ஏற்பாடு செய்த நீதிகளம் 2026 மார்ச் 21, 22 ஆகிய தேதிகளில் வி.ஜ.டி. வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். குறிப்பாக, மாணவிகள் பெரும்பான்மையாக பங்கேற்றது, சட்ட உலகில் மகளிரின் பங்களிப்பு அதிகரித்து வருவதை வெளிப்படுத்தும் முக்கிய அடையாளமாக அமைந்தது. மாணவர்கள் முதல் நீதியரசர்கள் வரை, அனைவரும் இணைந்து சட்டத்தின் எதிர்காலத்தைப் பற்றி ஆழமான சிந்தனைகளை பகிர்ந்தனர்.
இந்த நீதிகளம் மாநாட்டை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமை விருந்தினராக வந்து துவக்கி வைத்தார். தனது உரையில், “மாணவர்கள் திரைப்பட நடிகர்களைப் பின்பற்ற வேண்டாம்; அவர்களின் வாழ்க்கை கலை உலகம், ஆனால் உங்கள் வாழ்க்கை சமூகநீதி மற்றும் சட்டத்தின் உலகம். மாணவர்கள் தங்கள் சட்ட அறிவையும், சமூகப் பொறுப்பையும் முன்னிலைப்படுத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
இந்த துவக்க அமர்வு வி.ஐ.டி. நிறுவனர் டாக்டர் ஜி. விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது. மாண்புமிகு நீதிபதி ஆர். சுரேஷ் குமார், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், அரசியலமைப்பின் ஆழமான அர்த்தங்களையும், அதன் சமூகப் பங்களிப்பையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏ.பி.வி.பி. தேசியச் செயலாளர் ஸ்ரவண் பி. ராஜ் தனது உரையில், இளைஞர்கள் சமூக மாற்றத்தின் முதன்மை சக்தி என்பதை வலியுறுத்தினார். துவக்க விழாவிற்கு பின் நடைபெற்ற முதல் அமர்வில் நீதியரசர் எல்.சி. விக்டோரியா கெளரி தனது உரையில், “காலனித்துவச் சங்கிலிகளிலிருந்து அரசியலமைப்புச் சுயாட்சி” என்ற தலைப்பில் பேசினார். நமது நாடு காலனித்துவ அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, அரசியலமைப்பின் அடிப்படையில் சுயாட்சி பெற்றது எப்படி என்பதை மாணவர்களுக்கு விளக்கினார்.
இந்த அமர்வில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இணையுரையாடல் (interactive session) முறையில் கேள்விகளை எழுப்பினர். நீதியரசர் அவர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை அளித்து, சட்டத்தின் ஆழமும், அரசியலமைப்பின் பெருமையும் மாணவர்களின் மனதில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தினார்.
முதல் அமர்வுக்குப் பின், மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இது தனித்தனி வகுப்புகள் போல அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 5-க்கும் மேற்பட்ட தலைப்புகள் வழங்கப்பட்டு, மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கருத்துக்களை வெளிப்படுத்தினர். இறுதியில், சிறந்த 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அனைவரின் முன்னிலையிலும் வழங்கினர். இந்த நிகழ்ச்சி, மாணவர்களின் ஆராய்ச்சித் திறனையும், சட்ட சிந்தனையின் ஆழத்தையும் வெளிப்படுத்திய முக்கியமான தருணமாக அமைந்தது.
அடுத்த அமர்வில் நீதிபதி எஸ்.ஸ்ரீமதி “ஒரு வளமான பாரதத்திற்கான பெண் நீதியரசர்களின் பங்களிப்பு’’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த அமர்வில் மாணவர்கள் ஆர்வமுடன் கேள்விகள் எழுப்பி, கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அமர்வுகளுடன் சேர்ந்து கலாச்சார நிகழ்ச்சிகளும் நடந்தன.
இரண்டாம் நாள் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் அவர்கள் “செயற்கை நுண்ணறிவும் சட்டமும்: மாற்றங்களும் சவால்களும்’’ என்ற தலைப்பில் உரையாற்றியதுடன் தொடங்கியது. இந்த அமர்வு மிகவும் ஆர்வமூட்டும் வகையில் நடைபெற்றது. அடுத்த அமர்வில், நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி அவர்கள் “சட்டத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு” என்ற தலைப்பில் விரிவான உரையாற்றினார். அந்த அமர்வு மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. பல கேள்விகள் எழுப்பப்பட்டு, சுறுசுறுப்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த மாநாட்டின் சிறப்பு அம்சமாக, மற்ற மாநாடுகளில் போல காகிதத்தில் கருத்துக்களை பெறாமல், நேரடியாக மாணவர்களிடமிருந்து கருத்துக்களை பெறும் வகையில் தனிப்பட்ட அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், மாணவர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்களை மண்டல வாரியாக (துறை வாரியாக) பகிர்ந்தனர். இது மாணவர்களுக்கும், மாநாட்டை ஏற்பாடு செய்த குழுவிற்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
இரண்டாம் நாளின் அடுத்த அமர்வில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் “சட்டவியல் துறையில் இந்திய சிந்தனையின் பங்களிப்பு’’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த அமர்வும் மாணவர்களுடன் மிகுந்த தொடர்புடையதாக இருந்தது. மாணவர்கள் பல கேள்விகளை எழுப்பி, ஆர்வத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
நிறைவு அமர்வில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் அவர்களின் பங்கேற்பால் உயர்ந்தது. தனது உரையில், “நமது மக்கள் தொகையில் மிகச் சிறிய சதவீதம் மட்டுமே நீதிமன்றங்களை அணுகுகின்றனர். ஆனால், 5 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதித்துறையில் நிலுவையில் உள்ளன. இது நீதிமன்றங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை காட்டுகிறது. பல நீதிமன்றங்களில், நீதிபதி பணியிடங்களும், காலியாக உள்ளன. நீதியை பொதுமக்கள் வரை கொண்டுச் செல்லும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதற்கு முன் வரவேற்பு உரையை வி.ஐ.டி. துணைத் தலைவர் டாக்டர் ஜி.வி. செல்வம் வழங்கினார். சிறப்பு உரையை நீதிபதி குமரேஷ் பாபு நிகழ்த்தி, மாநாட்டின் அரசியல் மற்றும் அரசியலமைப்பு மதிப்பை வலியுறுத்தினார். அதேபோல், ஏ.பி.வி.பி. துணைத் தலைவர் டாக்டர் எம். நாகலிங்கம் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார்.
தமிழக ஆளுநர் மாநாட்டின் சிறந்த மூன்று வழக்கறிஞர்களுக்கு, விருதுகளை வழங்கினார். மாநாட்டின் இரு நாள் நிகழ்வுகளின் அறிக்கையை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் வாசித்தார். இறுதியில், ‘நீதிகளம் 2026‘ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மாணவர் மாநாடு “வந்தே மாதரம்” மற்றும் தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.
கட்டுரையாளர்: சட்டக்கல்லூரி மாணவி மற்றும் மாநில இணைச் செயலாளர்,
ஏ.பி.வி.பி வடதமிழகம்