டிஜிட்டல் வழி மக்கள் தொகை கணக்கெடுப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு எல்லா நாடுகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பின் வாயிலாக சேகரிக்கப்படும் தரவுகள் திட்டமிடலுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன. நம் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான முன்னெடுப்பு 1872ம் ஆண்டே தொடங்கி விட்டது. 1881ம் ஆண்டு முழுமையான முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்துள்ளது. இப்போது நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 16வது நடவடிக்கை, சுதந்திரத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் 8வது நடவடிக்கை.
மக்கள் தொகை கணக்கெடுப்பு துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும். தரவுகள் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நிகழாண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி டிஜிட்டல் ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கி விட்டது. 1948ம் வருட மக்கள் தொகை சட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 1990ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்படும் தரவுகள் வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் பயன்படுத்த அளிக்கப்பட மாட்டாது. நீதிமன்றத்தில் கூட, இந்தப் புள்ளிவிவரத்தை சான்றாக காட்ட முடியாது. புள்ளிவிவர தொகுப்பை மட்டுமே பயன்படுத்த முடியும்.
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு பாரதம். மக்கள் தொகையில் நாம்தான் முதலிடத்தில் உள்ளோம். பாரதம் முழுவதும் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. நகரங்கள் மட்டுமல்லாமல், சுமார் 6.4 லட்சம் கிராமங்களும் உள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக பட்ஜெட்டில் ரூ.11,718.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் அலுவலர்கள், ஊழியர்கள், கண்காணிப்பாளர்கள் என 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
முன்பெல்லாம் காகிதங்களில் தான் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. இப்போது தரவுகள் ஸ்மார்ட் போனில் பதிவு செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் சுய விவரத்தை பதிவு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு துரிதமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ளப்படுவதுடன் நம்பகத்தன்மை மிக்கதாகவும் அமையும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு சார்ந்த போர்டல் 16 மொழிகளில் இயங்குகிறது. முதல்கட்டமாக இந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் குடியிருப்பு இடங்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்படும். வீட்டின் பரப்பளவு எவ்வளவு? என்னென்ன வசதிகள் உள்ளன? ஸ்மார்ட்போன், வாகனம் மற்ற நவீன சாதனங்கள் உள்ளனவா போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.
2வது கட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும். இந்த காலகட்டத்தில் மக்கள் தொகை சார்ந்த அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும். பொருளாதார நிலை, சமூக நிலை, கல்வி உள்ளட்டவற்றுக்கு இந்த பதவில் முக்கியத்துவம் அளிக்கப்படும். 2027ம் ஆண்டு மார்ச் முதல் தேதி நள்ளிரவுக்குள் இந்த கணக்கெடுப்பை முடித்து விட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் மிகுந்த பனிப்பொழிவு மிக்க மாநிலங்களான ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், யூனியன் பிரதேசங்களான, ஜம்மு − -காஷ்மீர், லடாக் ஆகியவற்றில் நிகழாண்டு அக்டோபர் மாதம் முதல் தேதிக்கு முன்பாகவே இந்தப் பணியை நிறைவு செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு ஏற்கெனவே உரிய முறையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே பரீட்சார்த்த முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இ-கவர்னன்ஸ் எனப்படும் மின் ஆளுகைக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளித்து வருகிறது. 2047ல் சர்வதேச அளவில் பாரதத்தை மகத்தான சக்தியாக வளர்ந்தோங்க வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எல்லா நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக இருப்பது மக்கள் தொகை சார்ந்த தரவுகளே. இதனால்தான் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு வரலாற்றில், இந்த 16வது கணக்கெடுப்பு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது. இந்த புள்ளிவிவரம்தான் எதிர்காலத்தில் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, உள்கட்டமைப்பு, மக்கள் நல திட்டங்கள் ஆகியவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும். எனவேதான் இதை செம்மையாக நிறைவேற்றுவதில் கவனம் குவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு சேகரிக்கப்படும் தரவுகள் பூர்வாங்க முறையில் அடுத்தாண்டு இறுதியில் வெளியிடப்படும். முழுமையான விவரம் 2028ல் வெளியிடப்படும். பகுப்பாய்வு, தொகுப்பாய்வு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் அடங்கிய தொகுப்பு 2030ல் வெளியிடப்படும்.
கட்டுரையாளர் : செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி