நாளைய தமிழகத்திற்கு சேலம் தரும் சேதி

ஈவேரா நடத்திய ஊர்வலம் பற்றி பேசியதற்காக மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் உறுதிபட தெரிவித்தது அவரின் உறுதிப்பாட்டை, ஆளுமையை உணர்த்தியது. அதுமட்டுமல்ல, ‘எங்களை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது’ என்று ஜம்படித்து வந்த குழுக்களுக்கு சவுக்கடியும் கொடுத்தார்.

அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று தி.க.வினர் தெரிவித்ததே ரஜினி காந்துக்குக் கிடைத்த வெற்றிதான். ‘‘ஆமாம்… நாங்கள் நடத்தினோம்’’ என்று சொல்வதற்கான தைரியம் தி.க.விற்கு இல்லாமல் போய்விட்டது.

சேலம் திராவிடர் கழக ஊர்வலத்தில் 1971 – ல் என்ன நடந்தது என்பதற்கு ஆதாரமாக அப்போதைய ‘திணமணி’யில் வந்த செய்திகளை அந்த நாளிதழ் தெளிவாக வெளியிட்டது. ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் அந்த சம்பவத்தைக் கண்டித்து வெளியிட்ட தலையங்கத்தையும் செய்திகளையும் அந்த நாளிதழ் மீண்டும் பிரசுரித்துள்ளது. அப்போது ‘துக்ளக்’கில் வெளியான படங்களை இந்த வாரம் ‘துக்ளக்’ மீண்டும் பிரசுரித்துள்ளது.

சேலம் மாநாட்டில் திகவினர் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை ‘தினமணி’ வெளியிட்டுள்ளது. ‘‘பிறன் மனைவியை அபகரிப்பது குற்றமல்ல என்ற சட்டத்தை திருத்த வேண்டும்’’ என்ற தீர்மானம் அது. அதாவது யார் மனைவியை யார் வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம் என்பதற்கு சட்ட அனுமதி கேட்டு தீர்மானம்! அக்கிரமம்!!

திருவள்ளுவரை சொந்தம் கொண்டாட இவர்களுக்கு கொஞ்சம் கூட அருகதை கிடையாது. ‘‘பிறன்மனை நோக்கா பேராண்மை’’ வேண்டும் என்றவராயிற்றே அவர்?

ஈ.வே.ராவை சுதந்திரப் போராட்ட வீரர் என்று கூறிக் கொள்கிறார்கள். எங்களுக்கு சுதந்திரமே வேண்டாம் என்றவர் அவர்! அப்படி ஒருவேளை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் வெளியேற முடிவெடுத்தால் தமிழகத்தை மட்டுமாவது ஆங்கிலேயன் தனது ஆட்சியின் கீழ் வைத்துக் கொள்ளவேண்டும் என்று தீர்மானம் போட்டவர் அவர்!

1947 ஆகஸ்டு 15 அன்று நாடே சுதந்திர தினத்தையும் 1950 ஜனவரி 26 அன்று குடியரசு தினத்தையும் கொண்டாடிக்கொண்டிருந்தபோது அந்த நாட்களை ‘துக்க தினம்’ என்று ஈ.வே.ரா அறிவித்தார்.

இனி தமிழகத்தில் ஈ.வே.ராவின் கருத்துக்களுக்கோ, அவரின் ஜால்ராக்களுக்கோ இடமில்லை என்ற நிலை நோக்கி தமிழகம் நடை போடட்டும்.