கர்மவினை

சீக்கிய மதத்தை ஸ்தாபித்த குருநானக்கும் அவருடைய சீடர் ஒருவரும் ஒரு நாள் நடை பயணம் செய்து கொண்டிருந்தனர். வழியில் ஒரு மரத்தடியில் சிறிது ஓய்வெடுக்க அமர்ந்தனர். அப்போது சிலர் பல்லக்கு ஒன்றை தூக்கி வந்தனர். அதில் யாரோ ஒரு பிரமுகர் உட்கார்ந்திருந்தார். அந்தப் பல்லக்குப் பிரமுகரும் ஓய்வெடுக்கும் பொருட்டு அதே மரத்தடியில் ஒதுங்கினார். அவர் சிலரை அழைத்து தனக்கு விசிறச் சொன்னார்.

இதையெல்லாம் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த சீடர் குருநானக்கிடம், ”ஐயா… கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் தானே… அப்படியிருக்கும் போது ஒருவரை பல்லக்கில் அமர்ந்து வரும்படியும் சிலரை பல்லக்குத் தூக்கிகளாகவும் ஏன் படைத்துள்ளார்-?  பாவம்… அந்தப்  பல்லக்குத் தூக்கிகள். காலில் செருப்பு கூட இல்லாமல் தினசரி துன்பங்களை அனுவித்து வருகின்றனர். கடவுளின் படைப்பில் ஏன் இந்த வேறுபாடு?” என்று கேட்டார்.

குருநானக் சிரித்தபடி, ”எல்லோருமே தாய் வயிற்றில் பிறக்கும் போது ஆடை அணிகலன் இல்லாமல்தானே பிறக்கிறார்கள்? ஆனால் முற்பிறவிகளில் செய்த வினைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் ஒருவன் நன்மையோ, தீமையோ அடைகிறான். அவரவர்களின் கர்மவினைப் படி வாழ்வு அமைகிறது” என்றார்.