நானும் என் குருநாதர்களும்

அன்றாடம் இறைவழிபாட்டின் போது என் ஆசிரியர் பெருமக்களை ஒருமுறை எண்ணிப் பார்த்து அவர்களையும் சேர்த்து வழிபடுவது என் வழக்கம். அப்படிப்பட்ட எனக்கு அவர்களைப் பற்றி எழுத வாய்ப்பு அளித்த விஜயபாரதத்திற்கு என் இதயம் கனிந்த நன்றி.

நம் மன இருளை விரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குருநாதர்களே! பள்ளியில் நம் அறிவுக் கண்களை திறந்துவிட்டவர்களோடு இவர்களையும் சேர்த்தே நாம் வணங்க வேண்டும்.

அப்படிப் பார்த்தால் என் குருநாதர்களின் எண்ணிக்கை மிகப் பெரியது. இப்போது 60 வயதில் இருக்கிறேன். அப்படியே நான்கு வயதில் எனக்கு ஒண்ணாம் வகுப்பில் ஆசிரியராக அமைந்த சரஸ்வதி டீச்சரிடம் இருந்து தொடங்குகிறேன். அந்த டீச்சர் அப்படி ஒரு அழகு! அவர் அழகே மனதில் ஞாபகமாய் உள்ளது. எப்படிப் பாடம் கற்பித்தார் என்பது நினைவில் இல்லை. அடுத்து இந்திரா டீச்சர், ராமசாமி சார்… இவர்கள் தான் என் எலிமின்ட்ரி ஸ்கூல் நினைவில் உள்ளவர்கள்!

ஆறாம் வகுப்பில் இருந்து சேலம் மரவனேரி பாரதி வித்யாலயாவில் பயிலத் தொடங்கினேன். என் பூர்வஜென்ம புண்ணியத்தாலேயே நான் இங்கு பயின்றதாக கருதுகிறேன். பக்தி, ஒழுக்கத்துக்கு முதலிடம் அளித்த பள்ளி இந்த பள்ளி. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் என் ஆசிரியராக என்னை வழிநடத்தியவர் ஜி.கே. எனப்படும் கிருஷ்ணமூர்த்தி சார். அடுத்து அர்த்தநாரி சார். எட்டாம் வகுப்பில் வெங்கட்ராமன் சார்.

இவர்கள் காலத்தில் மனதில் ஆழமாக பதிந்த சம்பவங்கள் என்று எதுவும் இல்லை. ஒன்பதாம் வகுப்பில் இருந்து தான் நினைவில் வலிமை பெறுகின்றன. என் வகுப்பாசிரியராக ஆர்.ஆர். எனப்படும்  ராமச்சந்திரன் சார் அமைந்தார். இவரே என்.சி.சிக்கும் மாஸ்டர். இவரோடு சேர்ந்து கருப்பூரில் பொறியியல் கல்லூரியில் நடந்த என்சிசி முகாமில் 10 நாட்கள் கழித்ததை மறக்கவே முடியாது. கருப்பூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள ஓமலூருக்கு அதிகாலை வேளையில் மார்ச்பாஸ்ட் நடத்தி அழைத்துச் சென்றது ஒரு அழியா நினைவு.

சிறுவயதில் வீட்டைவிட்டு பிரிந்து 10 நாட்கள் சற்றே நாடோடி போல, அதேசமயம் நம்நாடு, நம் மக்கள் எனும் தேசபக்தி உணர்ச்சியோடு திகழ்ந்திட இந்த கேம்ப்தான் வழிவகுத்தது.

ஆர்.ஆர். இப்போதும் நலமாக இருக்கிறார். பெரும் ஆன்மிகவாதியாக மாறி யோகா, தியானம் என்று பயிற்றுவிப்பவராகவும் உள்ளார். சமீபத்தில் கூட என் குமுதம் சினேகிதி பேட்டியை வாசித்துவிட்டு போனில் பேசினார்.

இந்த பட்டியலில்  ஆர்.பி. சந்திரசேகர் சாரை என்னால் மறக்கவே முடியாது. வீட்டுப்பாடம் செய்யாவிட்டால் சட்டை பட்டனை அவிழ்த்து போடுவதுபோல் போட்டு பளார் என்று ஒரு அறைவிடுவார். இவர் கரங்கள் சட்டை பட்டனில் இருக்கும் போது என் கையிரண்டும் கன்னத்தை மூடிக்கொண்டுவிடும். இருந்தும் அவரே ஜெயிப்பார். அந்த அறை அன்று வலித்தாலும் இன்று இனிக்கிறது. கட்டுப்பாடு மிகுந்த கணித ஆசிரியராய் என்னை வழிநடத்தியவராவார்.

இப்போதும் என் நலனில் அக்கறை கொண்டு என்னை வழிநடத்தி வருகிறார். அதேபோல் சீனிவாசன் சார்! இவரது மீசைதான் அப்போது எங்களுக்கு பிடித்த விஷயம். நான் பள்ளிப் பருவம் முடித்து, இலக்கிய ஈடுபாடு காட்டி இலக்கிய சோலை என்று ஒரு அமைப்பை நிறுவிச் செயல்பட்டபோது அதன் தலைவராக இருந்து வழிகாட்டியவர்.

அந்த பள்ளியில் இதுபோல் என்னை செதுக்கிய திருவாளர்கள் சுகேசன், வை. மாதப்பன்,  வெங்கட ரமணன்,  சுப்ரமணியன், இன்ஜினியரிங் சீனிவாசன் சார், அந்தோணி முத்து, ஓவிய ஆசிரியர் எபினேசர் துரைராஜ், சூரிய பிரகாசம் சார், சுப்பு சார் அடேயப்பா… அந்த நாள் தான் திரும்ப வருமா?

குருநாதர்கள் பள்ளியோடு முடிந்துபோவதில்லை. கல்லூரியிலும் தொடர்கின்றனர்… பள்ளி கல்லூரிக்கு வெளியேயும் நம் அறிவுக்கண்களை திறந்தவர்கள் பலர் உண்டு. என் வரையில் வாகீச கலாநிதி கி.வா.ஜ.வில் தொடங்கி, எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதி, ஆனந்தவிகடன் எஸ். பாலசுப்ரமணியன், இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் என்று நீள்கிறது. இதில் எழுத்தாளர் மகரிஷியால்தான் நான் இந்திரா சௌந்தரராஜன் ஆனேன்.

இன்று என்னுள் பரிபூரணமாய் நிரம்பி எனக்கு ஒரு நல்வழியை இடையறாது காட்டி வருபவர் காஞ்சி பரமாச்சாரியார் எனப்படும் மகா பெரியவர். அனைவர் பாதங்களிலும் மலர்தூவி வணங்கி மகிழ்கிறேன்.