நாட்டியம்; முத்தமிழின் கலவை

மனிதனின் சராசரி வாழ்க்கையின் முக்கியமான அம்சமாக விளங்குவது கை அசைவுகள்.  ஒலி இல்லா மொழி பேசும் கை அசைவுகள் மனித இனம் தோன்றியது முதலே உள்ளவை. மனிதன் மொழிகள் பேசத் தொடங்கிய பின்னும் கை அசைவுகளின் முக்கியத்துவம் குறையவில்லை.

நாட்டியம் என்பது இயல் இசை நாடகங்களின் கலவை.  ஒரு கதையையோ ஒரு கருத்தையோ எல்லா மனிதர்களும் புரிந்து இன்புறும் விதமாக இசையோடு அங்க அசைவின் மூலம் வெளிப்படுத்துவதே நாட்டியம். கருத்துக்களை வெளிப்படுத்தும் கலை தான் அபிநயம்.  இதை நான்கு வகையாக பிரிக்கலாம். உடலுறுப்புகளால் வெளிப்படுத்துவது ஆங்கிக அபிநயம் சொற்களால் உணர்த்துவது வாசிக அபிநயம் உடல், ஒப்பனை,காட்சி மற்றும் பின்னணி அமைப்புகள் மூலம் உணர்த்துவது ஆஹார்ய அபிநயம் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை முகபாவத்தால் வெளிப்படுத்துவது சாத்விக அபிநயம். அதாவது அழுகையை கண்களாலும், மகிழ்ச்சியை சிரிப்பாலும், வெறப்பை புருவ அசைவுகளாலும்வெளிப்படுத்தலாம். ஆடல் கலை பயில்வது மேடை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அன்று.  உடலையும் உள்ளத்தையும் இன்னும் சொல்லப்போனால் உணர்ச்சி மற்றும் ஆன்மீக தளங்களிலும் கூட வாழ்க்கை பயிற்சி எடுப்பதற்கு இந்த கலை பயிற்சி அவசியம்.  அங்ஙனம் அபிநயம் பயில்வது மிகவும் முக்கியமானது.  அபிநய பயிற்சியின் ஓரு பாகம் தான் ஹஸ்தம் அன்றாட வாழ்க்கையில் கை அசைவுகள் நாம் அன்றாட வாழ்க்கையில் உடல் மொழி என்று குறிப்பிடும் உடல் அசைவுகளாலும் குறிப்பாக கை அசைவுகளாலும் பலவித உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துகிறோம்.  கர ஒலியின் முலம் உற்சாகப்படுத்துவது, வரவேற்க வணக்கம் கூறுவது, இல்லை என்று கை விரித்து கூறுவது, சத்தியம் செய்வது , ஒரு புத்தகத்தை குறிப்பதற்காக  கைகளை விரித்து காட்டுதல், புல்லாங்குழல் வாசிப்பது போல் கையை அபி நயித்தல் இப்படி பலவிதமான கை அசைவுகளின் மூலம் தெரி ந்தோ தெரியாமலோ நாம் பலவற்றையும் வெளிப்படுத்துகிறோம்.

ஆங்கீக அபிநயத்தில் முத்திரையில் ப்ரயோகங்கள் ஒரு முக்கியமான அஙகம் ஆகும். உடல் அசைவின் ஒரு பாகம் தான் கை அசைவு. நாட்டிய நூல்களில் கை அசைவிற்கு முத்திரை என்று பெயர். நாட்டிய சாஸ்திரத்தில் ஹஸ்தம் என்று கூறுவர். ரசிகர்களுக்கு சுவை உணர்வோடு மகிழ்ச்சியை ஊட்டுவதே நாட்டியத்தின் குறிக்கோள். முன்னதாக கூறிய அனைத்து அபி நயத்தையும் மனம் லயித்து  பாவத்தோடு வெளிப்படுத்தினால் தான் ரசிகர்களின் உள்ளத்தில் சுவை பிறக்க  ச்செய்யமுடியும்.
இந்த கருத்தை பரதர்பின் வரும் பாடலில் எடுத்துரைக்கிறார் கை வழி நயனம் செல்ல கண் வழி மனம் செல்ல மனம் வழி உணர்ச்சி செல்ல அதனின்று சுவை பிறக்கும்” நாடகம். நாட்டியம்.யோகா.ஆயுர்வேதம் இப்படி பல்வேறு துறைகளில் முத்திரைகள் வெவ்வேறு விதமாக முக்கிய அங்கம் வகிக்கின்றன.

நிருத்த ஹஸ்தம் நிருத்த ஹஸ்தம் என்பது அழகியல் மிகுந்த முத்திரைகள்.இதற்கு தனியாக பொருள் என்று ஏதும் கிடையாது. பரதமுனியின் நாட்டிய சாஸ்திர நூலில் நான்காவது அத்யாயமான தாண்டவ லட்சணம் மிகவும் முக்கியமானது. இந்த நூலில் அடிப்படையில் தாண்டவம் என்ற சொல்லுக்கு நிருத்தம் என்று பொருள். இதில் 108 கரணங்கள் பற்றி பரதர்குறிப்பிட்டுள்ளனர். பரதமுனியின் கூற்றுப்படி கரணம் என்ற சொல்லுக்கு பொருள்.

ஹஸ்தக பாத சமாயோகஹ
நிருதஸ்ய கரணம் பவேத்
மேல் கூறிய சுலோகதின் பொருள் நாட்டிய முத்திரைகளையும், கால் அசைவுகளையும்   இணைத்து செய்வதே கரணம் ஆகும். கால் அசைவுகள் என்பதை ‘சாரி’ என்றும் கை அசைவுகள் ‘நிருத்த ஹஸ்தம்’ என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும். கரணம் என்பது நளினம் கொண்ட உடல் அசைவுகள் அடங்கிய சுத்த நிருத்த வடிவமாகும். பூமி சாரி , ஆகாச சாரி மற்றும் 30 வகை நிருத்த ஹஸ்தங்களை ப்ரயோகித்து அதனுள் ரேசகம் என்னும் சூட்சுமதையும் சேர்த்து பரதமுனி கூறிய இலக்கணப்படி ஆடுவது கரணம் ஆகும்.

ஹஸ்த ப்ரயோகங்களில் ஐந்து விரல்கள் ஐம்பூதத்தை குறிக்கின்றன என்று யோக சாஸ்திர நூல்களில் கூறப்பட்டிருக்கிறது.  ஐந்து விரல்களில் அசைவுகளும் நம் உடலில உள்ள ஏழு சக்கரங்களையும் உணர்வு ட்டுவதாக கூறப்பட்டிருக்கிறது. இதில் இருந்து நாம் அறிவது என்னவென்றால் நாட்டியக்கலையும் யோகமும் ஒட்டிப் பிறந்த இரட்டை வாழைகள்.  நாட்டியமும் யோகமும் ஒன்றுக்கொன்று ஆழமான தொடர்புடையவை.  அதுமட்டுமல்லாது ஹஸ்த ப்ரயோகங்கள் உடல் ஆரோக்கியத்தையும் உள்ள நலத்தையம் பேணி பாதுகாக்க உறுதுணையாய் உள்ளது.  ஆகவே பெற்றோர்கள் சிறுவயது முதலே தங்கள் குழந்தைகளுக்கு நாட்டியம் பயில்விப்பது அவர்களின் வாழ்க்கையை நன்றாக் தயார் செய்யும் என்பதில் ஐயம் இல்லை.