நம் ராணுவத்தின் பலம் அதிகரிப்பு – வந்தன ரபேல் விமானங்கள்

ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து புறப்பட்ட, ஐந்து ரபேல் போர் விமானங்கள், ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள, விமானப்படை தளத்துக்கு, நேற்று வந்தடைந்தன. ‘இதன் வாயிலாக, நம் ராணுவத்தின் பலம் கூடியுள்ளதுடன், விமானப்படை வரலாற்றில், புதிய சகாப்தம் துவங்கி உள்ளது’ என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ‘டசால்ட்’ நிறுவனத்திடம் இருந்து, 59 ஆயிரம் கோடி ரூபாயில், 36 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் வாங்க, 2016, செப்., 23ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த ஆண்டு அக்டோபரில், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் சென்றார். அவரிடம், முதல் ரபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின், மெரிக்னாக் விமானப்படை தளத்தில் இருந்து, ஐந்து ரபேல் போர் விமானங்கள், 27ம் தேதி இந்தியா புறப்பட்டன. ஏழு மணி நேரப் பயணத்துக்குப் பின், ஐக்கிய அரபு எமிரேட்சின், அல் தப்ரா விமானப்படை தளத்தில் தரை இறக்கப்பட்டன. பின், அங்கிருந்து புறப்பட்டு, ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள, நம் விமானப்படை தளத்தை, நேற்று மதியம் வந்தடைந்தன.

பிரான்சில் இருந்து, 7,000 கி.மீ., துாரத்தை கடந்து வந்த போர் விமானங்களுக்கு, வானில், 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் போதே, எரிபொருள் நிரப்பப்பட்டன. ரபேல் விமானங்கள், இந்திய வான்வெளியை வந்தடைந்ததும், இரண்டு ‘சுகோய் 30 எம்.கே.ஐ. எஸ்’ போர் விமானங்கள், அவற்றை வரவேற்று அழைத்து வந்தன. வெற்றிகரமாக தரை இறங்கிய விமானங்கள், அம்பாலா விமானப் படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்களை, நமது விமானப்படையில் சேர்த்துக் கொள்ளும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி, அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து ரபேல் போர் விமானங்கள், பாதுகாப்பாக, அம்பாலா வந்தடைந்தன. இதன் வாயிலாக, நமது ராணுவத்தின் பலம் கூடியுள்ளதுடன், விமானப்படை வரலாற்றில், புதிய சகாப்தம் துவங்கி உள்ளது. இது, நம் படை திறனில், நிச்சயம் புதிய புரட்சியை ஏற்படுத்தும். ‘நம் எல்லையில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துபவர்களுக்கு, இந்த புதிய வரவு நிச்சயம் கவலையை ஏற்படுத்தும்’ என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தன், ‘டுவிட்டர்’ சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டார்.

‘சீனாவால் இனி நம்மை நெருங்கக் கூட முடியாது’

விமானப்படையின் முன்னாள் தலைமை தளபதி, பி.எஸ்.தானோ கூறியதாவது: உலகின் தலைசிறந்த போர் விமானமான ரபேலில், நம் பார்வைக்கு அப்பாற்பட்ட இலக்கை கூட துல்லியமாக தாக்கும் திறன் உள்ளது. எனவே, சீன ராணுவத்தின் அச்சுறுத்தல்களை, நாம் எளிதில் சமாளிக்க முடியும். சீனா, ஐந்தாம் தலைமுறை, ‘ஜெ–20’ போர் விமானங்களை கொண்டு, நம்மை அச்சுறுத்தி வருகிறது. இனி, ரபேல் போர் விமானங்களை, அவர்களால் நெருங்க கூட முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

அமித் ஷா வாழ்த்து

மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரபேல் விமான வருகை, நமக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள். இந்தியா பெருமை கொள்ள வேண்டிய நேரமிது. உலகின் சக்தி வாய்ந்த இந்த போர் விமானங்கள், வானில் எவ்வித சவால்களையும் எதிர்கொள்ள கூடிய திறன் கொண்டவை. நம் வான்வெளியை பாதுகாப்பதில், நம் வீரர்கள், முன்பை விட, அதிக ஆளுமையுடன் செயல்பட முடியும். நம் விமானப் படைத் திறனில், மிகப் பெரிய மாற்றத்தை, ரபேல் உருவாக்கும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.