நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு மாறுவது நோயல்ல, நம்புங்கள்!

உயிர்ப்பலி வாங்கும் நோய்களில் உலகின் 7வது இடத்தை பிடித்திருக்கும் சர்க்கரை வியாதி என்று செல்லமாக அழைக்கப்படும் டயாபடீஸ் பற்றிய விழிப்புணர்வுக்கான கட்டுரையே இது. இதுபற்றிய ஏராளமான புள்ளி விவரங்களை அள்ளித் தெளித்து Do’s and Don’t’s  பற்றியும் உணவு வகைகளையும் சொல்லில் உங்களை போரடிக்க வைக்கும் இன்னொரு டயாபடீஸ் ஆஸ்பத்திரி ஆகப் போவதில்லை நான். 16 ஆண்டுகளாக இந்த குறைபாடுள்ள (ஆம் இது நோயல்ல, நம் உடலிலுள்ள இன்சுலின் சுரப்பியின் அளவில் குறைபாடு) நான், பார்த்தவை எல்லாம், படித்து சொன்னவை எல்லாம் கேட்டு, தெரிந்தவை எல்லாம் செயல்படுத்தி ஒரு முக்கால்வாசி டாக்டராகிய அனுபவத்தின் அடிப்படையில் எழுதிய கட்டுரை இது.

பஞ்சம், பட்டினியை எதிர்த்த போராட்டம் ஒருபுறம், வளர்ச்சியும் முன்னேற்றமும் வேண்டிய எழுச்சி ஒருபுறம். உண்ட உணவு செரிக்காமல் ரத்தத்தில் சர்க்கரையாக மாறுவது முன்பெல்லாம் பணக்காரர்களுக்கும் மிட்டாமிராசுகளுக்கும் தான். இன்று உடல் உழைப்பில்லா வேலை, உருப்படாத உணவு வகைகள், மன அழுத்தம் என்ற சொல்லாடலில் ஒரு புதிய சர்வரோக அரக்கன் இவை தான் சர்க்கரை நோயின் தாய் தந்தையர்கள்.

இன்று இரண்டு மிக பிரபலமான விஷயங்கள் இக்குறைபாட்டை வியாபாரமாக்கி செல்வத்தை குவிக்கிறது. ஒன்று கை, கால், மூக்கு, நாக்குக்கு என தனித்தனி டாக்டர்கள் வந்துவிட்டது போல இதற்கும் டயபெட்டலாஜிஸ்ட்டுகள் வந்து விட்டனர். பவுண்டேஷன், ஆராய்ச்சி மையம் எனப்போட்டு, அரசு மானியம் வரிவிலக்கு பெற்று, உள்ளே நுழைந்து விட்டால் எல்லா டெஸ்டும் செய்து பர்சை காலி செய்யும் ஆஸ்பத்திரிகள்! இரண்டு, ஆயுர்வேத மூலிகை கஷாயம், மாத்திரை மருந்து என ஜீவபுஷ்டி லேகியத்திற்கு சமமாக, ஜடாமுடி, தாடி, பட்டை, காவி உடை தரித்த பழைய கால முனிவர்கள் வேஷத்தில் டிவிக்களில் வலம் வரும் இரவு நேர டாக்டர்கள். இவர்கள் மிகவும் சாதுர்யமாக வழங்குகிறது, ஆங்கில மருந்தோடு சேர்த்து இதைச் சாப்பிடுங்கள் என்ற மருத்துவ ஆலோசனைகள்.

இது தவிர உணவிலேயே இதை சரி செய்து விடலாம். மாத்திரைகளை நிறுத்தி விடலாம் என்று சில இயற்கை வைத்தியர்கள். உடற்பயிற்சியில் படிப்படியாக மாத்திரைகளை குறைத்து பிறகு ஒரேயடியாக நிறுத்தலாம் என சில வைத்தியர்கள்.

எதுவுமே வேண்டாம், உணவை வாயில் போட்டு கூழாக அரைத்து உமிழ்நீர் நிரம்ப நிரம்ப முழுங்குங்கள் மாத்திரை அவசியமாகாது என சில வைத்தியர்கள்.

இதற்கு மனம் தான் காரணம். ஹீலிங் மூலம் சரிசெய்து விடலாம். ரேக்கி மூலம் சரிசெய்யலாம் என மற்றும் சிலர்.

இப்படி  எல்லையில்லா, எண்ணிடலங்கா வைத்திய முறைகள் கொண்டதுதான் இந்த இன்சுலின் குறைபாடு நோய். வெறும் வெந்தயத்தை மட்டும் சாப்பிட்டு, அவ்வப்போது செவிவழி வைத்தியம் கேட்டு, சிறுகுறிஞ்சான்,  நவாப்பழக் கொட்டை, பாகற்காய், ஆவாரம்பூ கஷாயம், பொன்கரண்டிவேர் குடிநீர் என தனக்கு தெரிந்ததை குடித்து, சிறுநீரகம் செயலிழந்து இதய பாதிப்பினால் உயிரிழந்தோர் ஏராளம்.

இப்படி உண்மையான மூடநம்பிக்கைகளில் உடல்நலத்தை இழக்கும் ஆபத்து அதிகம் இருக்கும் மிகப் பெரிய நோய் சர்க்கரை வியாதியாகத்தான் இருக்கமுடியும்.

எனக்கு தெரிந்த இரண்டு இளைஞர்கள் 35-40 வயதுள்ளவர்கள்; இவர்களுக்கு பரம்பரை, வேலைப்பளு இவற்றின் காரணமாக சர்க்கரை வியாதி. 300லிருந்து 450 வரை சர்க்கரை அளவு எப்போதும். கேட்டால் அலட்சியமாக ‘அது என்ன செய்யப்போகுது, கெடந்துட்டு போகட்டும் கழுதை’ என்ற பதில்.

இப்படியே இதை விட்டு விடலாமா? இது சரியா? டயாபடீசுக்கு எந்த வகை மருத்துவம் சிறந்தது என்ற கேள்விக்கெல்லாம் பதில் நமக்கு தேவைப்படுகிறது.

மருத்துவ உலகம் தினசரி புதிய மருந்துகளை கண்டுபிடித்து வருகிறது. இதற்கு முன்பு பரிந்துரைத்த மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் தவறு என்று சொல்லி அதுவே புதிது புதிதாக மாற்றியும் தருகிறது.

வெறும் வயிற்றில் 120 மில்லி கிராமுக்குள்ளும் உணவு சாப்பிட்டு 2 மணி நேரத்தில் 160 மில்லி கிராமுக்குள்ளும் இருப்பது டயாபடிக் கன்ட்ரோல் என சொல்லப்பட்டது. அதாவது 3 மாத சராசரி சர்க்கரை அளவு 7க்குள் இருக்கவேண்டும் என்பது இப்போது 8 வரை இருக்கலாம் என புதிய ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

பாரதத்தில் இதுவரை இன்சுலின் குறைபாட்டுக்கு FDC எனப்படும் Fixed Drug Combination அதாவது இரண்டு மருந்துகள் சேர்ந்த மாத்திரை கொடுக்கப்பட்டு வருகிறது. இப்போது வெளியிட்டிருக்கும் ஆராய்ச்சி அது முழுக்க முழுக்க தவறு என்றும் கொடுக்கும் மருந்து கம்பெனிகளை எச்சரித்தும் இருக்கிறது.

டயாபடீஸ் டைப் 1, டைப்2 (குழந்தைகள்), ஜுவனைல் கர்ப்பகாலம் என நான்கு வகை. இதில் அதிகம் டைப் 2 தான். இது கடந்த 30 ஆண்டுகளில் 4 மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக வளரும் நாடுகளில் தான் மக்களிடம் இன்சுலின் சுரப்பி குறைபாடு அதிகம் காணப்படுகிறது. டயாபடீஸ் என்பது வியாதியல்ல, அது குறைபாடு தான் என்று ஏற்கனவே நாம் பார்த்தோம். இது முழுக்க முழுக்க வாழ்க்கை முறையால் வரும் குறைபாடே. எனவே லைஃப்ஸ்டைலை சீர்திருத்திக் கொண்டால் இக்குறைபாட்டை சரிசெய்து விடலாம். இது பலரால் பரீட்சார்த்தமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 6 மாகாணம், 6 வேறுபட்ட இனத்தை சேர்ந்தவர்கள், பல்வேறு வயது, எடை, வாழ்க்கைமுறை கொண்டவர்கள், டயாபடீசின் முதல் கட்டம் முதல் அதிகமாக இன்சுலின் போடுவோர் வரை ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டார்கள். மூன்று மாத காலத்துக்குள் உணவு, உடற்பயிற்சியால் அனைவரும் மருந்திலிருந்து வெளிக்கொணரப்பட்டனர். கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் பிரகாஷ் என்ற ஆங்கில வழி மருத்துவர் பெரிய ஆராய்ச்சிகளுக்கு பிறகு தினசரி ஒரு மணி நேரம் சில சாதாரண உடற்பயிற்சிகள் மூலம் சர்க்கரை அளவை (ரத்தத்தில்) நார்மலுக்கு வர வைக்கிறார். படிப்படியாக மாத்திரைகளை முழுதும் நிறுத்தும் நல்ல சிகிச்சை முறை இது.

ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் சிகிச்சை முறையில் அலோபதிதான் சிறந்த தீர்வு. மற்றவை பக்கபலம் தான்.

ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் போதும். புரியும்படி சொல்கிறேன். நம் உடலின் மிக முக்கிய உறுப்புகளான கண், இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றில் தலை முடியினும் மெல்லிய ரத்தக் குழாய்கள் உள்ளன. ரத்தத்தில் அதிகமாக சேரும் சர்க்கரை இவற்றில் வண்டலாக படிந்து அடைத்துக் கொள்கிறது. நாளடைவில் இவை செயலிழக்கிறது. எனவே தான் சர்க்கரை நோய் மிகவும் அமைதியான சத்தமில்லாத, கண்ணுக்கு தெரியாத ஆபத்தான உயிர்க்கொல்லி நோய்.

இதை ஆபத்தான விஷம் கொண்ட நாகப்பாம்புக்கு ஒப்பிடலாம். வாயை தைத்து விட்டால் பாம்பு கயிறுதான். சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, யோகா, தியானம், மருந்து எடுத்துக்கொண்டால் 100 ஆண்டுகள் பூரண ஆயுசாக டயாபடீசுடன் வாழ்க்கை நடத்தலாம்.

இறுதியாக, ஆனால் சுருக்கமாக, கட்டுப்பாடான உணவு, ஒரு மணி நேர உடற்பயிற்சி, சரியான டாக்டர் ஆலோசனைப்படி மருந்து இவைகளுடன் 3 மாதத்திற்கு ஒருமுறை ரத்தப்பரிசோதனை அவ்வளவுதான். சர்க்கரை வியாதியை நாம் வெற்றி கொள்ளலாம்.