நம்பிக்கையை கொல்லும் வஞ்சகர்கள்…

கோவை குனியமுத்தூரில் ஒரு முட்டுச்சந்தில் உள்ள அடுக்கு வீடுகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை கண்டுபிடித்தது வைரமோ,  தங்கமோ அல்ல! பெட்டி பெட்டியாக நெய் பாட்டில்கள்! அடப்பாவிகளா இது ஒரு சோதனையா? இவை வெறும் நெய்பாட்டில்கள் அல்ல! கலப்பட நெய் பாட்டில்கள். வெறும் கலப்படம் அல்ல! உடலுக்கு ஊறு விளைவிக்கும் ”ரசாயனம்” கலந்த நெய்!

இது ஒன்றும் அதிசயம் அல்லவே! கலப்படம் என்பது காலம் காலமாக இருந்து வருகிறதே. இதை கட்டுரை எழுதித் தான் தெரிய வேண்டுமா? என நீங்கள் கேட்பது புரிகிறது. கலப்பட நெய்யில் ரசாயனம் கலப்பதை சொல்லுவது மட்டும் இக்கட்டுரையின் நோக்கம் அல்ல! அதற்கு மேலும் உள்ள நெஞ்சை நெருடும் விஷயங்கள் தான் முக்கியம்.

நெய் பாட்டிலின் லேபிளில் ”சுத்தமான நாட்டுப் பசு நெய்” என்ற வாசகம். விலையும் உண்மையான நாட்டுப் பசு நெய் விற்கும் விலை அளவு. வியாபாரத்திற்காக வைக்கப்பட்ட இடம், மக்கள் கிராமத்துப் பொருட்கள் என நம்பும் ”உழவர் சந்தை” ! மிக நல்ல ஆரோக்கியமான பொருள் வேண்டும் என்ற ”பொது ஜனத்தின்” நம்பிக்கையில் ”ஆசிட் ஊற்றும்” அயோக்கியத்தனம் அல்லவா இது?

இந்த நெய்யை தயாரித்தது யார் தெரியுமா? கீழ்தட்டு, நடுத்தட்டு, சுய உதவிக்குழு பெண்கள்! இது அவர்களுக்கு அநியாயமாகத் தெரியவில்லை? தெரியவில்லை! பழக்கப்பட்டுப்போன ”குற்றவாளிகள்” இவர்கள்.

பாலிலே தண்ணீர், டீத்தூளில் மரத்தூள், சாம்பார் பொடி, ரசப்பொடி ரெடிமேட் உணவுப் பொருட்களில் கலர் ரசாயனம் என்பதெல்லாம் தொடர்ந்து பார்த்துப் பார்த்து நாம் ஏற்றுக்கொண்ட கலப்படங்கள். அதை சாப்பிட்டு சாப்பிட்டு நம் உடலும் ”ரசாயன மாற்றம்” அடைந்து வருகிறது. ஆக தவறுகளை ஒரு அளவிற்கு வேறு வழியின்றி நாமே நியாயப்படுத்தி சமாதானம் அடைந்து வருகிறோம். இப்போது நடப்பது நம்பிக்கை மோசடி.

இது ஸ்பெஷல்  ஜீரகச் சம்பா அவல். கேரளா மட்டை அரிசி அவல் என கடையில் வாங்கும் அவலை தண்ணீரில் சுத்தம் செய்யுங்கள். அது தமிழ்நாட்டு வெள்ளை அவலாகி பல்லை இளிக்கும். நமக்கு ஒரு ஸ்பெஷல் பொருள் வேண்டும்  என செல்லும் போது அதில் மோசடி செய்வது கொலைக் குற்றத்திற்கு சமமாக வைத்து தண்டிக்கப்பட வேண்டும்.

மனித சமூகத்தின் அடிநாதம் நம்பிக்கைதான். கல்யாணம், வீட்டு விழாக்கள்,  பொருள் வாங்கச் செல்லும் கடை, சாப்பிடச் செல்லும் ஓட்டல் என நமது நம்பிக்கையை பெற்றவர் அல்லது தெரிந்தவர்களிடமே நாம் வரவு செலவு வைத்துக் கொள்கிறோம். மனித மனது ”தெரிந்தவர்கள் ஏமாற்றமாட்டார்கள்” என்கிற எண்ணத்தை நம்முள் விதைத்திருக்கிறது.

இக்கட்டுரையின் நோக்கம் ”அனைவரும் மோசமானவர்கள் என்பதோ நம்முன் ஏற்கனவே இருக்கும் ”நம்பும் மனதை சிதைப்பதோ” அல்ல. ஆனால் ஏமாற்றுபவர்களில் பலபேர் நம் நம்பிக்கையை பெற்றவர்கள் என்பதே! ஆகவே உஷாராக இருப்போம் என்பதே!

* ஜெசிந்தா தன்ராக் என்கிற பக்கத்து வீட்டுக்காரர், கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு ”டாகுமெண்ட்டை” வங்கியில் வைத்து ரூ.50 லட்சம் கடன் பெற்று தருவதாக ஏமாற்றிய செய்தி இந்த வார நியூஸ்.

* ஒரிஜினல் தேன் இது என தேன் அடையை காண்பித்து சர்க்கரை பாகை தலையில் கட்டும் திறமையை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.

* இந்த பனங்கற்கண்டு கருப்பட்டி ஒரிஜினல்  என சர்க்கரை கட்டியை கருப்பு சாயம் போட்டு விற்பது (காரணம் சர்க்கரை விலை மிகக் குறைவு) ஒரிஜினல் செக்கு எண்ணெய் என ஒயிட் ஆயிலை கலப்பது, விற்பது மனசாட்சியை பஞ்சை போட்டு துடைத்து விட்ட வஞ்சகர்களின் செயலாகவே நான் பார்க்கிறேன். இதே மாதிரி நம்பிக்கை சிதைப்புக்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இதைவிடக் கொடுமை நம்மை சுற்றி நடக்கும் பாலியல் பலாத்காரங்களும் கொலைகளும் தான்.

பாலியல் குற்றங்களில் குறிப்பாக, சிறார்களின் பாலியல் கொடுமைகளில் 93 சதவீதம் அந்த குழந்தைகளுக்கு ஏற்கனவே தெரிந்தவர்களே ஈடுபட்டிருக்கிறார்கள் என்று புள்ளி விபரம் சொல்கிறது. இதை நாம் பத்திரிகைகளிலும் படித்திருக்கிறோம்.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் 5 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்து சீரழித்து கொன்றவன் அதே குடியிருப்பில் வசிக்கும் 26 வயது இளைஞன்! அக்குழந்தையோடு தினசரி விளையாடுபவன் என்ற செய்தி  நம் இதயத்தை பொடிப் பொடியாக்கியது அல்லவா?

காக்க வேண்டிய பள்ளித் தலைமை ஆசிரியரே மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததால் கைது செய்யப்பட்டதான செய்தி, நம்பிக்கைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் அல்லவா?

பாலியல் குற்றங்கள் பற்றிய ஒரு ஆய்வின் அறிக்கை, நம்பிக்கை அஸ்திவாரத்தில் மேலும் பல விரிசல்களை உண்டு பண்ணுவதாக உள்ளது.

* இக்குற்றங்களில் நமக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர்களில் 90 சதவீதம் பேர் நமக்கு தெரிந்தவர்கள். நம்மிடம் பழகுபவர்கள் என்பது பெரும் அதிர்ச்சியே!

* வெறும் 9 சதவீதம் பேர் மட்டுமே ”அந்நியர்கள்,” நமக்குத் தெரியாத வெளியாட்கள்.

* 23 சதவீதம் பேர் நம்முடைய உறவினர்கள், நமக்குத் தெரிந்த குடும்ப நண்பர்கள்.

* 20 சதவீதம் பேர் அன்றாட வாழ்வில் நம்மோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவர்கள். வியாபாரம், படிப்பு, தொழில், அலுவலகம், கோயில் உள்ளிடவற்றில் நடக்கும் சமய நிகழ்ச்சிகள் இவற்றின் போது சந்திப்பவர்கள் அல்லது வேலை பார்ப்பவர்கள். ஆக மனித குலத்தில் மைய நூலிழை ஒருவருக்குகொருவர் நட்பாக, அன்பாக, பாசமாக இருப்பது, பழகுவது, வாழ்வது என்ப பதில் இந்த நிலை ஒரு சாபக்கேடு இந்த சூழ்நிலைகளை தவறாகப் பயன்படுத்தும் சில அற்பர்களை கண்டு கொண்டு நாம் ஒதுங்கிப்போகும் ”புத்திசாலித்தனத்தை” பெறவேண்டும். இதை நம் குழந்தைகள், ஏன் வீட்டில் உள்ள அனைவருக்கு, கற்றுத்தர வேண்டும்.

இனி பார்த்துப் பார்த்து தான் பொருள் வாங்க வேண்டும். பார்த்துப் பார்த்து தான் பழக வேண்டும்.இது பயமல்ல, எச்சரிக்கை.