பாரதிய மஸ்தூர் சங்கம், ஜூலை மாதம் 23 ஆம் தேதி, 1955ம் ஆண்டு போபாலில் வைத்து துவக்கப்பட்டது. அச்சமயத்தில் ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., ஹெச்.எம்.எஸ் போன்ற ஏனைய சங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அச்சங்கங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் பிரிவாக செயல்பட்டு வந்தன. அரசியல் கட்சிகள் பிளவுபடும் போது, அதனை சார்ந்த தொழிற்சங்கங்களும் பிளவுபட்டன. தவிர பல சங்கங்கள் தொழிலாளர்களுக்கு தேசப்பற்றை ஊட்டுவதற்கு பதிலாக, தேசத்திற்கெதிராகவும் தொழிலாளர்களை வழி நடத்தின. இவற்றையெல்லாம் கவனித்த ஆர்.எஸ்.எஸ்ன் இரண்டாவது சர்சங்கசாலக் பரமபூஜனீய குருஜி அவர்கள், தந்தோபந்த் தெங்கடி அவர்களிடம் அரசியல் சார்பற்ற, தேசத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு தொழிற்சங்கத்தை துவக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து, சங்கத்தைத் துவக்கப் பணித்தார். தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளைக் குறித்து அறிந்து கொள்வதற்காக, 1949 வருடம் பல்வேறு துறைகளில் செயல்பட்டுக் கொண்டிருந்த சங்கங்களில் செயலாற்றினார். தெங்கடிஜியின் அசாதாரணமான செயலாற்றலால் மிக விரைவிலேயே ரயில்வே, வங்கி, தபால் போன்ற துறைகளில் செயலாற்றி, தொழிற்சங்கங்களின் உயர்ந்த பொறுப்புகளை அடைந்து செயலாற்றினார். தொழிற்சங்கப்பணிகளை பயின்ற பின் பாரதிய மஸ்தூர் சங்கத்தை துவக்கினார்.
குறிக்கோள்:
தேசிய மறுசீரமைப்பு, தேச நலன், தொழிற்துறை நலன், தொழிலாளர் நலன், தேசிய உணர்வுள்ள தொழிலாளர், தொழிலாளர் பங்கு வகிக்கும் தொழிற்சாலைகள், தொழிற்சாலைகள் நிறைந்த தேசம். பாரதத்தை உலகத்தின் சக்திவாய்ந்த தேசமாக உயர்த்த, அதன் தனித்துவமான கலாச்சாரம், மேன்மைமிகு பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைப்பது.
ஒரு மனிதனின் 6 அடிப்படைத், தேவைகளைப் பூர்த்தி செய்தல் அவையாவன – உணவு, உடை, வீடு, கல்வி, ஆரோக்கியம் மற்றும் கெளரவம்.
அடிப்படைக் கோட்பாடுகள்:
- அரசியல் சார்பற்றது – ஆனால் தொழிலாளர் நலன் காப்பது, தொழிலாளர் தலைமையை உருவாக்குவது.
- ஆக்கபூர்வமான அணுகுமுறையில் நம்பிக்கை வைத்து செயல்படல்.
- தொழிலாளர் நியாயமான கோரிக்கைக்கு, வன்முறையைத் தவிர்த்து, ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பது.
- தனி மனிதனுக்கு முக்கியத்துவம், தனி குணநலன்களை மேம்படுத்தி மாற்றங்களை உருவாக்குதல்.
பி.எம்.எஸ்.-ன் அணுகுமுறை:
- தேசியத்தை மையமாக வைத்து தொழிற்சங்கத்தை நடத்துவது
- கம்யூனிசம் – முதலாளித்துவம் ஆகியவற்றை புறக்கணிப்பது.
- தொழிற் துறைகளில் மோதல் போக்கைத் தவிர்த்து “தொழில் குடும்பம்” என்ற முறையை உருவாக்குதல்.
- அணுகு முறையைப் பொறுத்து நிர்வாகம் மற்றும் அரசுகளுடன் உறவு.
- வருமானம் 1:10 என்ற விகிதாச்சாரத்தில் அமைய வலியுறுத்துதல், போன்றவற்றில் கவனம் செலுத்தி “உழைப்பை ஆராதனை” யாகக் கருதும் மனோபாவத்தை உருவாக்குவதில் தீவிரமாக செயல்படுகிறது.
தொழிலாளர்களை தங்களின் பொருளாதார தேவைகளுக்காகப் போராடுபவர்கள் என்ற நிலையிலிருந்து மாற்றி, சமூக, தேச நலன்களுக்காகவும் பாடுபடுபவர்களாக மாற்றிட பி.எம்.எஸ். கீழ்க்கண்ட நாட்களை கொண்டாடுதல் மற்றும் கடைபிடிப்பது ஆகியவற்றை நடைமுறைப்படுத்துகின்றது.
- மார்ச் 8 – மஹிளா தினம்
- மார்ச் 25 – கணேஷ் சங்கர் வித்யார்த்தி பலிதான தினம் (சர்வபந்த் சமாதர் மஞ்ச்)
- ஜூலை 23 – ஸ்தாபன தினம்
- ஆகஸ்டு 28 – அமிர்தா தேவி பலிதான தினம் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்)
- செப்டம்பர் 17 – விஸ்வ கர்மா ஜெயந்தி (தேசிய தொழிலாளர் தினம்)
- அக்டோபர் 14 – தத்தோபாந்த் தெங்கடி நினைவு தினம் (சமூக நல்லிணக்க தினம்)
- டிசம்பர் 12 – பாபுகேனு பலிதான தினம் (சுதேசி தினம்)
வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்கள்:
- 1955 -– 1967ல், பல்வேறு மாநிலங்களில் அமைப்பை உருவாக்கி, 1967ல், டெல்லியில் முதல் அகில பாரத மாநாட்டை நடத்தியது.
- 1984ல், மத்திய அரசு நடத்திய உறுப்பினர் சரி பார்ப்பில் (Number of members Verification) பி.எம்.எஸ். 2-வது இடத்தை அடைந்தது.
- 1985 -– 1988ல், மிக மோசமான காலகட்டமாக பாரதத்திற்கு அமைந்தது. தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல், உலக மயமாக்கல் ஆகிய கொள்கைகளை மத்திய அரசுகள் நடைமுறைப்படுத்தின. பாரதிய மஸ்தூர் சங்கம் இக்கொள்கைகளை கடுமையாக எதிர்த்தது.
- 1989-ல் முதலிடத்தை அடைந்தது. செங்கொடிகளை பின்னுக்குத் தள்ளி, உலக அரங்கில் பாரத தொழிலாளர்களின் பிரதிநிதியாக மாறியது.
வெவ்வேறு கால கட்டங்களில் பல்வேறு போராட்டங்களை, ஆட்சி செய்வது யாரென்று பார்த்து ஏனைய இயக்கங்கள் போராட்டங்களை நடத்திய போது, ஆட்சியிலிருப்பது யாரென்று பார்க்காமல், பேச்சு வார்த்தையையும், போராட்டத்தையும் பி.எம்.எஸ். ஒருங்கே நடத்தியது. அதன் விளைவாக போனஸ் சட்டம், பிரசவ விடுமுறைக்கான சட்டம், குறைந்தபட்ச ஊதிய சட்டம், பணிக்கொடை சட்டம், தொழிற்சங்க சட்டம், ஈ.எஸ்.ஐ., ஈ.பி.எப் சட்டங்கள் ஆகியவற்றில் திருத்தம் செய்து, மிகப்பெரும் பலன்களை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தது.
மேலும் அங்கன்வாடி, ஆஷா, பொதுத்துறை, பாதுகாப்புதுறை என அனைத்துத் துறைகளிலும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வினைப் பெற்றுத் தந்தது. இவையனைத்தும் பி.எம்.எஸ்-ன் சாதனைகளில் சில துளிகள் மட்டுமே.
பி.எம்.எஸ்-ன் தொடர்ந்த வற்புறுத்தல்களின் காரணமாக, 29 தொழிலாளர் சட்டங்களை, 4 தொகுப்புகளாக மாற்றியுள்ளது. அதில் ஊதிய சட்டம், சமூகப் பாதுகாப்பு குறித்த சட்டம் ஆகியவை டாக்டர் அம்பேத்கரின் காலத்திற்கு பின் இயற்றப்பட்ட சட்டங்களாக, பி.எம்.எஸ். பார்க்கிறது. அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் பி.எம்.எஸ்.
நாடு முழுவதும் பி.எம்.எஸ். வளர்ச்சியடைந்தது போலவே, தமிழகத்திலும் அதன் முத்திரையைப் பதித்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, கரூர் போன்ற மாவட்டங்களில் தொழிலாளர்களின் எண்ணத்தை தீர்மானிக்கும் சத்தியாக, பி.எம்.எஸ். மாறியிருக்கிறது. மின் வாரியம், போக்குவரத்துத்துறை போன்றவற்றிலும் திருச்சி பெல் போன்ற தொழிற்சாலைகளிலும், பாரதிய மஸ்தூர் சங்கத்தின் நிலைபாடுகளுக்கு தொழிலாளர்கள் ஆதரவைத் தருகின்றனர். அமைப்புசாராத் துறையிலும், மிக விரைவான வளர்ச்சியை பி.எம்.எஸ். கொண்டிருக்கிறது.
உலக அரங்கில் பி.எம்.எஸ்-ன் முக்கியத்துவம்
பாரதத்தின் முதன்மைச்சங்கம் என்ற அடிப்படையில், சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தில் (ILO) பாரத தொழிலாளர்களின் பிரதிநிதியாக, பி.எம்.எஸ். பங்கேற்கிறது. ஏனைய அனைத்துச் சங்கங்களும் பார்வையாளர்களாக மட்டுமே பங்கேற்கின்றன.
ஜி – 20
பாரதத்தில் நடைபெற்ற ஜி20 மாநாட்டினையொட்டி நடைபெற்ற மாநாடு தொடர்பான அனைத்து நிகழ்வுகளுக்கும், பாரதிய மஸ்தூர் சங்கம் தலைமையேற்றது. பிரிக்ஸ் நாடுகளில், தொழிற்சங்க கூட்டமைப்பு உட்பட பல அமைப்புகளிலும், பி.எம்.எஸ். மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக விளங்குகிறது. பல்வேறு நாடுகளிலும் நடக்கும் கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், பி.எம்.எஸ்-ன் பிரதிநிதிகள் பங்ககேற்கின்றனர்.
1955ல், பூஜ்யத்திலிருந்து துவங்கிய பாரதிய மஸ்தூர் சங்கம், இன்று உலகின் தொழிலாளர் இயக்கங்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களது நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய, பி.எம்.எஸ்.ஐ மத்திய தலைமை அழைப்பது அங்கீகாரத்திற்கு கிடைத்த சான்றாகும். பாரதிய மஸ்தூர் சங்கத்துக்கு “நாடே முதன்மையானது“.