“யங் லாயர்ஸ் அசோசியேஷன்” என்ற டில்லியை மையமாகக் கொண்டு செயல்படுகின்ற அமைப்பின் தலைவர் (அவர் ஒரு இஸ்லாமியர்) இளம் ஹிந்து பெண் வழக்கறிஞர்கள் சிலரை தூண்டி விட்டு, கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஓர் வழக்கினை தொடர்ந்தார். சபரிமலையில் ஐயப்பனை தரிசிப்பதற்கு பெண்களுக்கு பாகுபாடு உள்ளது என்றும், பெண்கள் உரிமை நசுக்கப்படுகிறது என்றும், ஆகவே பெண்கள் உரிமையை காத்து சபரிமலைக்கு எல்லா தரப்பட்ட பெண்களையும் ஐயப்பனை தரிசிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், அனைத்து பெண்களும் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்கச் செல்லலாம் என்ற தீர்ப்பினை வழங்கியது. உடனே கேரளா கம்யூனிச பினராய் விஜயன் அரசு சபரிமலையில் ஆண்டாண்டு காலங்களாக கடைப்பிடித்து வரும் ஆச்சார அனுஷ்டானங்களை உச்ச நீதிமன்றத்திற்கு விரிவாக எடுத்துரைக்காமல், உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை அமலாக்கம் செய்ய வேண்டுமென முடிவு செய்தது.அதே சமயம் சபரிமலை `அய்யப்ப சேவா சமாஜமும், பந்தள ராஜ வம்சாவழியினரும், தந்திரி குடும்பத்தாரும் இணைந்து இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டனர்.
மேலும் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம், பந்தளம் அரச குடும்பத்தின் ஒத்துழைப்புடன் இத்தீர்ப்பினை எதிர்த்து ஒரு நாம ஜெப யாத்திரை நடத்தவும் திட்டமிட்டனர். அதன்படி, பக்தர்களான பெண்கள் பெரும் எண்ணிக்கையில், 2018 அக்டோபர் மாதம்2ல், பந்தளத்தில் ஒன்று சேர்ந்து நாமஜெப யாத்திரையை நடத்தினார்கள். இதில் 50,000த்திற்கும் மேற்பட்ட சகோதரிகளும், தாய்மார்களும் அந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
2018 அக்டோபர் 8ல், சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் முயற்சியால் கேரளாவில் உள்ள அனைத்து ஹிந்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து, சபரிமலை கர்மசமிதி (சபரிமலை பாதுகாப்பு இயக்கம்) என்ற ஒரு அமைப்பினை உருவாக்கியது.
ஹிந்து ஆராதனைக்கு புறம்பாக செயல்படுகின்ற நாத்திக பெண்கள் அமைப்பில் இருந்த பெண்களை தூண்டிவிட்டு பெண்களை ஐயப்பனுடைய சன்னிதானத்திற்கு முன்பு நிறுத்தி வழிபாடு செய்ய வைக்க வேண்டும் என்ற அல்பமான செயலில் பினராய் விஜயன் அரசாங்கம் இறங்கியது.
கேரள அரசினை கண்டித்து நாடு முழுவதும் கர்ம சமிதி சார்பாக கண்டன கூட்டங்களும், ஆர்பாட்டமும் நடந்தது. இதற்கு சிகரம் வைத்தது போன்று, 2018 டிசம்பர் மாதம் 27-ம் தேதி கேரளா – கர்நாடகா எல்லையான மஞ்சேசுவரம் முதல் தமிழகத்தின் எல்லையான களியக்காவிளை வரை, சுமார் 762 கிலோமீட்டர் நீளத்திற்கு, சரியாக மாலை 5.39 மணிக்கு அனைவரது கைகளிலும் தீபம் ஏந்தி முப்பது லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்ட மிகப் பிரம்மாண்டமான மனித சங்கிலி போராட்டத்தை நடத்தியது சபரிமலை பாதுகாப்பு இயக்கம்.
அதுமட்டுமல்லாமல், பம்பையில் இருந்து சன்னிதானம் வரை வனத்தினுள் 10 முதல் 15 நபர்கள் வரை சிறு சிறு குழுக்களை அமைத்து நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட பக்தர்களை இரவு பகலாக வனத்தினுள் தங்க வைத்து எப்பொழுதெல்லாம் கம்யூனிச அரசு பெண்களை சன்னிதானத்திற்கு கூட்டி வர முயல்கின்றதோ அப்பொழுதெல்லாம் அந்த இடத்தில் வனத்தினுள் தங்கி இருந்த பொறுப்பாளர்கள் அனைவரையும் ஒன்று கூடி பெண்களை மேலே கூட்டிச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். இப்படி 65 நாட்களும் சன்னிதானத்தை பேணிக்காத்தது சபரிமலை பாதுகாப்பு இயக்கம்.
இருப்பினும் அதிகார துஷ்பிரயோகம் கொண்ட கம்யூனிச அரசு, இதை எல்லாம் மீறி, இரு பெண்களை (பிந்து அம்மிணி, கனகதுர்கை) மாறு வேடமிட்டு, காவல்துறை பாதுகாப்புடன் சன்னிதானத்திற்கு கூட்டிச் சென்றது நமக்கு தெரியும்.
இவ்வாறெல்லாம் ஐயப்ப தர்மத்தையும் சனாதன தர்மத்தையும் அழிப்பதற்காக கச்சை கட்டி இறங்கிய கேரளஅரசு இப்பொழுது மட்டும் ஐயப்பன் மேல் பக்தி கொண்டு ஆகோள ஐயப்ப சங்கமம் நடத்தியது எதற்காக?
இதே ஆண்டில், ஜூலை மாதம் நான்காம் தேதி கேரள கம்யூனிச பினராய் விஜயின் அரசின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திருவதாங்கூர் தேவசம்போர்ட்டின் வாயிலாக சபரிமலை சன்னிதானத்திற்கு வேறு ஒரு ஐயப்ப சுவாமியின் விக்ரகம் செய்து தர வேண்டுமென ஈரோட்டை சார்ந்த பிரபல லோட்டஸ் ஹாஸ்பிடலின் டைரக்டர் டாக்டர் E.K.சகாதேவன் ஆகியோருக்கு மற்றும் சிற்பி J.வெங்கடேஷ் அவர்களுக்கும் ஒரு ஆணையை பிறப்பித்தனர்.
ஆனால் இந்த விஷயத்தை குறித்து சுவாமியை பூஜிக்கின்ற தந்திரி மார்களுக்கோ, மேல்சாந்திமார்களுக்கோ மற்றும் சபரிமலை சிறப்பு ஆணையருக்கும் கூட தெரியவில்லை.
இந்த விஷயத்தைக் குறித்து சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் தேவசம் போர்டின் தலைவர் இடமும், செயல் அலுவலர் இடமும் கேள்வி எழுப்பினோம்.இருவரும் பதில் கூற முடியாமல் திணறினர்.மேலும் நமது சமாஜம் சபரிமலை ஸ்பெஷல் கமிஷனரை அணுகி அவர்களின் வாயிலாகவே கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறெல்லாம் ஐயப்ப தர்ம ஆச்சார அனுஷ்டானங்களை கேலிக்கூத்தாக்கும் கேரள கம்யூனிச அரசு, இப்பொழுது மட்டும் ஐயப்ப சங்கமம் நடத்தியதின் நோக்கம் என்ன?
வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு ஹிந்து ஓட்டு வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்க்காக. கடந்த பாராளுமன்ற தேர்தலில் வீழ்ந்த ஹிந்து வாக்குகளில் 41 விழுக்காடு பா.ஜ.கட்சி பெற்றுள்ளதை அறிந்த பினராய் விஜயன், அந்த ஹிந்து ஓட்டு வங்கியை தனக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும் என நடத்திய நாடகம் தான் இந்த சங்கமம்.
இவைகள் மட்டுமல்லாமல் கடந்த 11/09/2025 ஆம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் ஸ்ரீ கோயிலின் இடது புறமும் வலது புறமும் கருங்கல்லால் ஆன துவார பாலகர்கள் சிலைக்கு அணிவிக்கப்பட்டு இருந்த தங்கக் கவசத்தை சபரிமலை ஸ்பெஷல் கமிஷனருக்கு கூட தெரிவிக்காமல், கேரளா உயர் நீதிமன்றத்திடமும் அனுமதி பெறாமல் அந்த இரு தங்கக்கவசங்களையும் மராமத்து பணி செய்வதாக கூறி, கவசத்தை அப்புறப்படுத்தி உள்ளனர். இதில் நான்கு கிலோ தங்கம் காணாமல் போய் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இவ்வாறெல்லாம் ஊழல் கரை படிந்த கேரள கம்யூனிச அரசு,20/09/2025 அன்று ஆகோள ஐயப்ப சங்கமத்தை நடத்தியதன் மற்றொரு நோக்கம் என்ன? பிரபல ஜோதிடர் கூறியதை கேட்டு, 2018 முதல் தம்மையும் தமது குடும்பத்தையும் பிடித்து ஆட்டுகின்ற சுவாமி ஐயப்பனின் கோபத்தை தணிக்க பம்பையில் யாகம் நடத்தி, ஐயப்ப சங்கமம் நடத்தி அன்னதானம் வழங்கியுள்ளார்.
மக்களின் வரிப்பணத்தில் பல கோடிக்கு மேல் செலவு செய்து ஐயப்ப சங்கமத்தை நடத்த கேரள அரசிற்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்பது அப்பாவி மக்களின் கேள்வி.
இவ்வாறு 4500க்கும் மேல் ஐயப்ப பக்தர்களை எதிர்நோக்கி பல கோடிகள் செலவழித்தும், அந்த நிகழ்விற்கு வெறும் 623நபர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். அதிலும் கேரளா கம்யூனிச அரசின் கட்சியின் பிரதிநிதிகள் மட்டுமே அதிக அளவில் பங்கு கொண்டிருந்தார்கள்.ஐயப்ப பக்தர்கள் மிகவும் குறைவாகவே கலந்து கொண்டிருந்தார்கள்.
இவ்வாறெல்லாம் அநீதியும் அக்கிரமும் அவிழ்த்து விட்டு ஆடும் கேரள கம்யூனிச பினராய் விஜயனின் அரசை மக்கள் கேள்வி எழுப்பவில்லை என்றாலும், எம்பெருமான் அய்யன் ஐயப்பனிடம் இவர்கள் எல்லாம் ஒரு தினம் பதில் சொல்லியே தீர வேண்டும்.
ஐயப்ப பக்தகோடிகளின் சங்கமம் 22/09/2025 திங்கட்கிழமை அன்று, ஐயப்பன் பிறந்து வளர்ந்த மண்ணான பந்தளத்தில் கூடியது. இக்கூட்டத்தை சபரிமலை ஐயப்ப சேவா சமாஜமும், மற்ற ஹிந்து அமைப்புகளும் இணைந்து சபரிமலை கர்ம சமிதி பெயரில் ஏற்பாடு செய்திருந்தது.
மூன்று ஆயிரம் பக்தர்களை எதிர்பார்த்த மாநாட்டில், ஐயனின் அருளால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்த கோடிகள் கலந்து கொண்டார்கள். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழகத்தைச் சார்ந்த அண்ணாமலை மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தேஜஸ்வி சூரியாவும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
1) 2018 முதல் இன்று வரை சபரிமலையில் நடந்த அநியாயங்களை கேள்விகளாக எழுப்பிய பக்தர்களின் மேல், நீதிமன்றத்தில் உள்ள அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும்.
2) சபரிமலையின் ஆச்சாரங்களை நிலை நிறுத்தி வளர்ச்சி பாதைக்காக ஒரு திட்டத்தைதயார் செய்வதற்காக ஓர் குழுவினை உருவாக்குவோம்.
3) சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை ஓர் ஹிந்து ஆலயமாக நிலை நிறுத்துவதற்காக எல்லா ஐயப்ப பக்தர்களும் கோடிகளும் கூட்டாக சங்கல்பம் எடுப்போம்.
4) சபரிமலை ஆலயத்தை மோசடியில் இருந்து பாதுகாப்பதற்காக சபரிமலை ஐயப்ப விமோஜன என்ற ஓர் அமைப்பை உருவாக்குவோம்.
5) மத்திய அரசு தலையிட்டு சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை காக்க வேண்டும் என மனு அளிப்போம் என தீர்மானிக்கப்பட்டது.
கட்டுரையாளர்:- G.N.ஜெயராம், ஷேத்ர பொதுச்செயலாளர், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம்