தொழிலதிபர் திடுக்கிடும் தகவல்: திரிணமுல் எம்.பி.,க்கு சிக்கல்

அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடியை குறிவைத்து கேள்வி கேட்க, திரிணமுல் காங்., – எம்.பி., மஹுவா மொய்த்ரா, தன் ‘பார்லிமென்ட் லாகின்’ ஐ.டி.,யை தந்ததாக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்தவர், மஹுவா மொய்த்ரா, 49; மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இவர், பார்லிமென்டில் பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் வாங்கியதாக, பா.ஜ., – எம்.பி., நிஷிகாந்த் துபே சமீபத்தில் குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளை, மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி மறுத்தனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும்படி பார்லி., நிலைக்குழுவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இந்நிலையில், அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடி குறித்து கேள்வி கேட்க, திரிணமுல் காங்., – எம்.பி., மஹுவா மொய்த்ராவை பயன்படுத்தியதாக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி நேற்று ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக, தன் கையெழுத்துடன் கூடிய அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். அதன் விபரம்:

அதானி குழுமத்தை குறிவைத்து பார்லிமென்டில் கேள்வி எழுப்ப, மஹுவா மொய்த்ராவை பயன்படுத்தினேன். இதற்காக, அவரது ‘பார்லி., லாகின்’ ஐ.டி.,யை பயன்படுத்தினேன். இந்த செயலுக்காக, வெளிநாடு சுற்றுலா செலவு, விலை உயர்ந்த ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட சலுகைகளை, மஹுவா மொய்த்ரா கேட்டார்.