ஆர்.எஸ்.எஸ் சாமானியர்களையும், அசாதாரணமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, எளிய வாழ்க்கை வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த வேணுகோபால் அவர்களைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
ஆறுமுகம் -− பார்வதியம்மாள் தம்பதியினருக்கு மகனாக, 1955 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி, சென்னை அமைந்தகரையில் பிறந்தார் வேணுகோபால் ஜி. அவருடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன், இரண்டு தம்பி, ஒரு அக்கா மற்றும் ஒரு தங்கை என மொத்தம் ஏழு பேர். தந்தை ஒரு கம்பெனியை நிறுவி நடத்தி வந்தார். எட்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த பிறகு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பை நுங்கம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தார். அங்கு தான் சுப்பாராவ் ஜி தலைமையாசிரியராக இருந்தார்.
ஏற்கனவே சங்க அறிமுகம் இருந்ததால், சுப்பாராவ் ஜியுடன் நெருங்கிப் பழகினார், வேணுகோபால் ஜி. அவரது தந்தை ஆறுமுகம் ஜி மற்றும் சித்தப்பா வி. கோவிந்தராஜ் ஜி, வி. சங்கர் ஜி என மூவரும், தமிழகத்தில் சங்கத்தைத் தோற்றுவித்த தாதாராவ் பரமார்த் ஜியுடன் நெருங்கிப் பழகியவர்கள். அவர் ஆரம்பித்த ஷாகாவிற்கு சென்றவர்கள்.
1975 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சி கொடுந்துயரத்தால், நாட்டில் உள்ள பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவற்றைக் கண்டு பொங்கி எழுந்த வேணுகோபால் ஜி, தலைமறைவாக இருந்து பல வேலைகளை செய்தார். எமர்ஜென்சிக்கு எதிராக மக்கள் படும் இன்னல்களை அனைவரும் அறியும் வகையில், வீட்டில் துண்டு பிரசுரங்களை தயாரித்து, யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் விநியோகிப்பார்.
துக்ளக் இதழின் 11வது ஆண்டு விழா, சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. அப்போது துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி உட்பட பலரும் கலந்து கொண்டு, எமர்ஜென்சிக்கு எதிராக சிறப்புரை ஆற்றினார்கள். அதில் கலந்து கொண்டு எமர்ஜென்சிக்கு எதிராக சத்தியாகிரகப் போராட்டம் செய்ததால், வேணுகோபால் ஜி கைது செய்யப்பட்டு ஒரு வருஷம் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் அவரது அக்கா அமிர்தவள்ளியும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.
எமர்ஜென்சி விலக்கப்பட்டதும், 1977 ஆம் ஆண்டு முதல் சங்கப் பிரச்சாரக்காக வந்தார். மதுராந்தகத்தில் சங்கப் பிரச்சாரக் பணியை தொடங்கி, பின்னர் எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, ஓமலூர் போன்ற பகுதிகளில் சங்கப் பிரச்சாரக்காக இருந்தார். மதுராந்தகத்தில் தாலுகா பிரச்சாரக்காக இருந்தபோது, 1977 ஆம் ஆண்டில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் சங்கத்தின் மூத்த பிரச்சாரக்கான சூரி ஜி, துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி, அன்றைய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உட்பட பலரும் கலந்து கொண்டு, எமர்ஜென்சியின் கொடூர தாண்டவத்தை மக்கள் அறியும் வகையில் பேசினார்கள்.
1983 ஆம் ஆண்டில், பாலக்கோட்டில் பிரச்சாரக்காக இருந்தபோது இராம கோபாலன் ஜி, தாணுலிங்க நாடார் ஜி போன்ற இந்து முன்னணியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து, “ஹிந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு” நடத்தினார். அதன் விளைவாக விநாயகர் சதுர்த்தி நாளன்று, பலரும் விநாயகர் சிலையை வைத்து வழிபடத் தொடங்கினர்.
1987 ஆம் ஆண்டில் பாலக்கோடு, கிருஷ்ணகிரி, ஒசூர், தர்மபுரி என நான்கு தாலுகா பிரச்சாரக்காக இருந்த போது, வீட்டிற்கு திரும்பினார். அதன்பின்னர் அதே வருடத்தில் “விஸ்வ விபாஹ்” (வெளிநாட்டில் வாழும் ஹிந்துக்கள் ஒற்றுமைப் பணி) பிரச்சாரக்காக இருந்த சமல்லால் ஜிக்கு உதவியாளராக, டெல்லியில் ஆறு ஆண்டுகள் இருந்தார்.
1990 ஜனவரி மாதம் 31ல், சங்கப் பிரச்சாரக்காக இருந்த உத்தம்ராஜ் ஜியின் முன்னேற்பாட்டில் ரமணி அம்மாளுடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு தினேஷ், ஹரிஷ் என்ற இரண்டு மகன்களும், விஸ்ருத்தா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
1992 ஆம் ஆண்டில், சில மாதங்கள் ஜவுளி வியாபாரம் செய்தார். அதன்பின்னர், டாக்டர் ஜியின் பெயரில் “ஸ்ரீ கேசவர் ஆப்டிகல்ஸ்” என்ற கடையை சென்னை அமைந்தகரையில் ஆரம்பித்து, தொடர்ந்து 35 ஆண்டுகள் நடத்தி வருகிறார்.
2002 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மாதம் தோறும் ஆலயங்களை சுத்தம் செய்யும் பணியை வணிக நோக்கமில்லாமல் பலருடன் சேர்ந்து செய்து வருகிறார். 2017ல், 200 அடியார்களுடன் வாரணாசியிலும், அதே ஆண்டில் 800 அடியார்களுடன் ராமேஸ்வரத்திலும் என நாடு முழுவதும் உள்ள பல ஆலயங்களை சுத்தம் செய்து உள்ளனர். இதுவரை 291 கோயில்களில் உழவாரப்பணி நடைபெற்றுள்ளன.
1974 ஆம் ஆண்டில், திருவேடகத்தில் முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை முடித்த பிறகு, 1975ல் இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை திருச்சியிலும், 1978ல் மூன்றாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை நாக்பூரிலும் முடித்துள்ளார். தொடர்ந்து 15 வருடங்கள் இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமில் சிக்ஷக்காக இருந்துள்ளார்.
காலம் சென்ற சங்கத்தின் மூத்த பிரச்சாரக்குளான இராம கோபாலன் ஜி, தனுசு ஜி, உத்தமராஜ் ஜி, சூரி ஜி, ஸ்ரீ கணேசன் ஜி என பல ஷேத்ர, பிராந்த அதிகாரிகள் வேணுகோபால் ஜி வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். அவரது அக்கா அமிர்தவள்ளி அம்மாள் சமிதியில் இருந்ததால், சமிதி பொறுப்பாளர்களும் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர்.
மூத்து மகன் தினேஷ் அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரிகிறார். முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை முடித்து உள்ளார். மற்றொரு மகன் ஹரிஷ் சென்னை கொளத்தூரில் ஆப்டிகல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். ஒரே பெண் விஸ்ருதா ஹைதராபாத்தில் கண் மருத்துவராக உள்ளார். அவர் பெண்கள் அமைப்பான சமிதியில் சங்கப்பணி செய்துள்ளார்.
பிரச்சாரக்காக இருந்து, குடும்பஸ்தராக ஆன பின்பும் தொடர்ந்து ஹிந்து ஒற்றுமைப் பணியை செய்து வரும் வேணுகோபால்ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.
கட்டுரையாளர் : அ. ஓம்பிரகாஷ்