தினக்கூலி தொழிலாளியின் மகன் உருவாக்கிய ட்ரோன் : இன்று இந்திய ராணுவத்தின் தேவைக்காகப் பறக்கிறது

இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள பஹன்வி கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் சர்மா. அவரது தந்தை சஞ்சீவ் சர்மா தினக்கூலி தொழிலாளி. தாய் இல்லத்தரசி. சாதாரண குடும்பப் பின்னணியில் வளர்ந்த சர்வேஷுக்கு, சிறு வயதிலிருந்தே தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கணினிப் பொறியியல் படித்த சர்வேஷ், படிப்புடன் சேர்த்து ட்ரோன் தொழில்நுட்பம் தொடர்பான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார். அவருடைய வாழ்க்கையில் முக்கியமான திருப்பமாக அமைந்தது, தேசிய அளவிலான ட்ரோன் போட்டி.
ஐ.ஐ.டி ஜோத்பூர் மற்றும் கோனார்க் கார்ப்ஸ் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் நாடு முழுவதிலிருந்தும் சுமார் 50 அணிகள் பங்கேற்றன. ‘Open Cardboard Drone Competition’ என்ற இந்தப் போட்டியில் சர்வேஷின் குழுவும் களமிறங்கியது. முடிவில் கிடைத்தது நான்காவது இடம், அதனுடன் கிடைத்தது ₹10 லட்சம் பரிசுத் தொகை.
இந்த வெற்றி சர்வேஷுக்கு வெறும் பரிசாக மட்டும் தெரியவில்லை. ட்ரோன் தொழில்நுட்பத்தை இன்னும் பெரிய அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை அது உருவாக்கியது. குறிப்பாக, இந்தியாவின் உயரமான எல்லைப் பகுதிகளில் பணியாற்றும் பாதுகாப்புப் படையினர் எதிர்கொள்ளும் கண்காணிப்புச் சவால்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.
அப்போது அவருக்குள் ஒரு கேள்வி எழுந்தது, “பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்புப் பணிக்கு உதவும் வகையில் ஒரு ட்ரோனை நாமே உருவாக்க முடியாதா?” அந்தக் கேள்விதான் அடுத்த கட்டப் பயணத்துக்கான தொடக்கம். தன்னிடம் இருந்த வளங்களைக் கொண்டு ஆரம்பகட்ட ட்ரோன் மாதிரியை உருவாக்கத் தொடங்கினார். அதற்காக அவர் செலவிட்ட தொகை சுமார் ₹87,000. இந்த சிறிய முயற்சி, பின்னர் மிகப்பெரிய வாய்ப்புக்கான கதவைத் திறந்தது.
தனது ட்ரோன் திட்டத்துக்கான முன்மொழிவை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Defence Innovation Organisation (DIO) மற்றும் Innovations for Defence Excellence (IDEX) திட்டத்தின் கீழ் சமர்ப்பித்தார்.
சிறிய அளவில் உருவாக்கப்பட்டிருந்த மாதிரி, அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. ‘Rudra Edge T-1 (Spectra)’ என்ற பெயரில், இந்த ட்ரோன் இந்திய ராணுவத்தின் உயரமான மற்றும் மலைப்பாங்கான எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளுக்காக உருவாக்கப்படுகிறது. அந்தப் பகுதிகளில் நிலவும் கடுமையான வானிலை, உயரம் மற்றும் புவியியல் சவால்களை கருத்தில் கொண்டு தொழில்நுட்ப ரீதியாகத் தேவையான திறன்களை ட்ரோனில் உருவாக்குவது திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
மேலும், ரேடாரில் கண்டறியப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் வகையிலும், மின்னணு இடையூறுகளை எதிர்கொள்ளும் வகையிலும் ட்ரோனை உருவாக்கும் நோக்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் இருந்து வந்த மாணவன், தினக்கூலி தொழிலாளியின் மகன், கையில் இருந்த குறைந்த அளவிலான பணம், ஆனால், பார்வை மட்டும் மிகப்பெரியது. 87,000 செலவில் தொடங்கிய ஒரு முயற்சி, இன்று ₹3.5 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் திட்டமாக மாறியிருக்கிறது.
கட்டுரையாளர்: அன்னபூரணி ராஜேஷ்