தொடரும் தி.மு.க.வினரின் அராஜகம்

தமிழகத்தில் தி.மு.கவினர் பதவியேற்றது முதல், தி.மு.கவினரும் கவுன்சிலர்களும் அவர்களின் உறவினர்களும் செய்து வரும் அட்டூழியங்களும் அடாவடிகளும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. இதனால் அப்பாவி பொதுமக்கள் சிலரும் உயிரிழந்துள்ளனர் என்பதும் வேதனையானது. அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களில் வெளியான இரண்டு சம்பவங்கள்: ஈரோடு மாவட்டம் எல்லைபாளையம், முல்லை நகரை சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பவர் நூல் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர், நேற்று தனது செல்போனில் எடுத்த வீடியோ ஒன்றை தனது உறவினர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் அவர், ‘லாட்டரி சீட்டால் தான் 62 லட்ச ரூபாய் இழந்து விட்டதாகவும், தனது தற்கொலைக்கு கருங்கல் பாளையம் 39 வார்டு தி.மு.க கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். லாட்டரி சீட்டை தமிழகத்தில் முற்றிலும் தடை செய்ய வேண்டும் எனவும், செந்திலிடமிருந்து 30 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக பெற்று தனது குடும்பத்திடம் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.

மற்றொரு சம்பவத்தில், வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக இருந்தவர் அதே பகுதியை ராஜசேகர். இவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அக்கடிதத்தில்,”மனைவி காந்திமதி என்னை மன்னித்துவிடு, நான் உன்னைவிட்டு போகிறேன். குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள், எனது இந்த முடிவுக்கு கவுன்சிலர் அரிதான் காரணம் வேறு யாரும் காரணம் இல்லை” என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஊராட்சி வரும் நிதியை தனக்கு வழங்க வேண்டும் என கவுன்சிலர் அரி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும். ராஜசேகர் தனது தம்பிக்கு ரேசன் கடையில் வேலை வாங்கி தருவதாக 2 1/2 லட்சம் பணம் பெற்ற கவுன்சிலர் அரி, வேலை வாங்கி தராமல் அலைக்கழித்ததாகவும். பணத்தை திரும்பி கேட்ட போது ஒழித்துவிடுவேன், வேலையில் இருந்து தூக்கி விடுவேன் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக ஊராட்சி செயலாளர் ராஜசேகர் உயிரிழந்ததாக உறவினர்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் இதுபோன்ற தொடர் அட்டூழியங்களை தடுக்க நடவடிக்கை எடுப்பாரா?