தைப்பூசம்

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். சிவபெ ருமான் உமாதேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம். தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது நற்பலன்களைத் தரும் என்பர்.
தைப்பூச தினத்தன்று புனித நீராடி இறைவனை வழிபடும் வழக்கமும் உண்டு. “பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே” என்று பாடுகிறார் திருநாவுக்கரசர். தைப்பூச வழிபாடு கோலாகலமாய் மக்கள் திரண்டு வழிபடும் ஒரு காட்சியை திருஞானசம்பந்தர் “மைப்பூசு மொண்கண் மடநல்லார்…” என பாடுகிறார்.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என அருளிய வள்ளலார், வடலூர் ராமலிங்க சுவாமிகள் ஜோதியில் இரண்டறக் கலந்ததும் தைப்பூச நன்னாளில்தான். இந்நாளில், சத்திய ஞானசபையில் திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலும், தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பழனிக்கு ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் விரதம் இருந்து பாத யாத்திரையாக வருவார்கள். இவர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். தைப்பூசம் முருகனுக்கு மட்டுமல்ல, சிவ வழிபாட்டுக்கும், சக்தி வழிபாட்டுக்கும்கூட மிக உகந்த நாள்.

தமிழகத்தில் மட்டுமல்ல, மொரீஷியஸ், சிங்கப்பூர், மலேஷியா, தென்னாப்பிரிக்கா, பிஜி தீவு, ரீயூனியன் தீவு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் பாரத வம்சாவளியினர் தைப்பூசத்தை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.