தேர் போல கார் நடந்தால் தேசம் என்ன ஆவது!

 

இனி, வரும் ஆண்டுகளில் இந்தியாவில் கார்களின் உற்பத்தியை குறையுங்கள்! சாலையை அடைத்து வரும் கார்களினால் இன்னொரு தேசிய நெடுஞ்சாலை அமைத்தால்தான் நெருக்கடி தீரும். இதற்கு இன்னும் ரூ 80,000 கோடி தேவைப்படும் என்று சொன்னவர் இந்நாட்டின் தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி.

அமைச்சரின் இந்த பேச்சு இந்நாட்டின் சாலைகள், கார்களாலே நிரம்பி வழிவதையும் போக்குவரத்து தேர்பவனி போல ஊர்ந்து செல்வதையும் 4வழி, 6 வழிச்சாலைகள், ரேஸ் கோர்ஸாக மாறி விபத்துக்கள் மலைபோல் குவிவதையும் பார்த்து படும் கவலையின் வெளிப்பாடே!

சொந்த வீடு வேண்டும் என்பதைவிட சொந்தக்கார் வேண்டும் என்பது நம்மவரில் பலரின் முதலுரிமை! கார்கள் நிறுத்த அமைக்கப்பட்டதுதான் நாம் பயன்படுத்தும் சாலைகள்! அதற்கென்று தனி ஷெட் வைத்துக் கொள்பவர்கள் முட்டாள்கள்!

கார்கள் வாங்குவது சுகம், குடும்பப் பயணத்திற்கு என்பதுபோய், அது ரேஸ் ஓட்ட என்பதாகிவிட்ட மனநிலை! எவ்வளவு பெரிய கார் வைத்திருக்கிறீர்களோ அவ்வளவு உயர்ந்தது உங்கள் சமூக அந்தஸ்து! அதுவும் 7 பேர் பயணிக்கக் கூடிய காரில் நீங்கள் மட்டும் முன் சீட்டில் அமர்ந்து செல்போனை காதில் வைத்துக் கொண்டு செல்வது பெரும் அந்தஸ்து!

சரி! சப்ஜெட்டுக்கு வருகிறேன். இந்த கட்டுரையின் நோக்கம், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட கருத்தை அடுத்து, நாம் எவ்வளவு பெரிய போக்குவரத்து நெரிசலை சந்தித்துக் கொண்டிருக்கிறோம், விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம், இதற்கு தீர்வுதான் என்ன என்பதை ஒட்டியதாகும்! ஒரு கார் விளம்பரம் கூட, கார் சாலையில் ஓடுவதை காண்பிப்பதில்லை. மலை, ஆறு, புழுதி வீசும் காடுகளில் என்பதும் ரேஸ் மனநிலைக்கு காரணம்!

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் 2015 புள்ளிவிவரப்படி இந்திய சாலைகளின் நீளம் 54 லட்சத்து 72,000 கிலோமீட்டர். இது உலகின் இரண்டாவது நீளமான சாலை.

இதில் வல்லவன் வாஜ்பாயின் கனவு திட்டமான, இந்தியாவை 8 திசைகளிலும் இணைக்கின்ற ‘தங்கநாற்கர சாலை’கள் இதுவரை 1 லட்சம் கி.மீ. அதிகமாக போடப்பட்டுள்ளது.

சாலைகள் இணைப்பை தேசிய நெடுஞ்சாலையோடு நிறுத்திக் கொள்ளாமல், கிராமங்களை நகரங்களோடு இணைக்கும் சாலைகள் உருவாக்கி தேசம் முழுதும் உள்ள மக்களை சாலைகளால் இணைக்கும் பெருமையை நரேந்திரமோடி அரசு செய்து வருகிறது!

சமூக, பொருளாதார, கலாச்சார வளர்ச்சிக்கு சாலைகள் பெரும்பங்கு வகிக்கிறது என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்! இந்த வளர்ச்சியே நம் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடும் சூழலும் உருவாகி வருகிறது. இதை வருமுன் காப்பதே நல்லது என நம் அரசு விரும்புகிறது.

அப்படி சாலைகள் எப்படி வீழ்ச்சிக்கு காரணமாகிறது என நீங்கள் கேட்பதும் காதில் விழுகிறது!

2016-2017 ம் ஆண்டு மட்டும் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் குழுமம் 2 கோடியே 53 லட்சம் வாகனங்களை தயாரித்திருக்கிறது. இதில் 2 கோடி இரு சக்கரவாகனங்களும் 38 லட்சம் கார்களும் அடக்கம். சாலைகள் போதாது! சாலை போக்குவரத்தில் புதிய சாலைகள் போடுவதில் ஆண்டுக்கு 60 சதவீதம் பட்ஜெட் தொகை தொடர்ந்து நாம் ஒதுக்கீடு செய்து வருகிறோம்! ஆனாலும் வாகனங்களின் பெருக்கம், சாலைகளின் பெருக்கத்தை விட பன்மடங்காக உள்ளது! இதே வேகத்தில் வாகன உற்பத்தி தொடருமானால் நமக்கு இன்னொரு தனியான தங்கநாற்கர சாலை போடவேண்டி வரும்!

இந்த வாகன பெருக்கம், மோட்டார் செக்டாரின் உற்பத்தி என்கிற வகையில் பொருளாதாரத்தை வளரச்செய்தாலும், எரிபொருள் தேவையினால், பெட்ரோலிய பொருள் இறக்குமதியில் நம் அன்னிய செலாவணி அத்தனை விழுங்கி ஏப்பம் விடுகிறது.

நம் நாட்டின் பெட்ரோலிய பொருளின் 80 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்துதான் பூர்த்தி செய்து கொள்ளமுடிகிறது! ஒரு 7,8 சதவீதத்தை, நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற எண்ணெய்  கிணறுகள் மூலம் பெற முயன்றாலும் அதற்கு தேசவிரோத சக்திகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன!

2016-17ம் ஆண்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி மட்டும் 20 கோடி டன்னுக்கும் அதிகம். இது இந்திய நாணய மதிப்பீட்டில் சுமார் ரூ 5.75 லட்சம் கோடி. இது நமது வெளிநாட்டு வியாபார சேமிப்பு நிதிக்கு ஒரு சவால்.  உலகின் மூன்றாவது பெரிய எரிபொருள் உபயோகிப்பாளராக இந்தியா இருந்து வருகிறது!

ஒருபக்கம் உள்ள சாலைகளை நிரப்பி வழியச்செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு! மறுபக்கம் அதற்கு தீனிபோடும் எரிபொருளுக்காக, இறக்குமதி மூலம் அன்னியச் செலாணியை இழந்து வரும் அபாயம். மூன்றாவது,  சாலை விபத்துக்களால் லட்சக்கணக்கில் நடந்துவரும் உயிர்பலிகள்!

கார்களின் தயாரிப்பை சிலகாலத்துக்கு என்று அதன் துறை அமைச்சரே தற்போது அறிக்கை வெளியிட்டுவிட்டார்! தயாரிப்பை நிறுத்துவது மட்டும் தீர்வாகாது. இப்படி இன்னும் பயன்படும், செயல்படுத்த முடிந்த ஆலோசனைகள் பெற்று, செயல்படுத்தி, வாகன ஊர்வலத்தை, நெரிசலை குறைத்தால், எரிபொருள் இறக்குமதியில் பாதியைக் குறைக்கலாம். சாலை விபத்து உயிரிழப்பில் பாதியை தவிர்க்கலாம்! புதிய சிந்தனையில், புதிய செயல்பாட்டில், பப்ளிக் டிரான்ஸ்போர்டேஷனை, பொதுப் போக்குவதத்தை ஊக்கு விப்போம்! அடுத்த சந்ததிக்கு கொஞ்சம் சாலையும், நிறையும் மாசற்ற சுற்று சூழலையும் விட்டுச் செல்வோம்!

 

 

சாலை பலி லட்சங்களில்!

2016ல் மட்டும் சாலை விபத்தினால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் விலை மதிப்பில்லாத உயிர்களை நாம் இழந்திருக்கிறோம்! இதில் கலைஞர்கள், டாக்டர்கள், அறிஞர்கள், அப்பாவி குழந்தைகள், பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும் அடங்குவர்.

4.8 லட்சம் விபத்துக்கள் மூலம் 4.9 லட்சம் பேர் முடமாக்கப்பட்டுள்ளனர்! சுருக்கமாக சொல்வதானால் நமது நாட்டில் இன்று மணிக்கு 17 பேர் சாலை விபத்தில் கொல்லப்படுகிறார்கள்!

இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

  1. சாலை விதிகள் மீறப்படுவது.
  2. நிரம்பி வழியும் வாகன எண்ணிக்கை.
  3. மதுபோதையில் அதிவேக ஓட்டம்.
  4. தரமற்ற சாலைகள்.
  5. இவற்றில் அனைத்துமே காரணமாக இருந்தாலும் பெருகி வரும் கார்களின் எண்ணிக்கையும், மதுபோதை ஓட்டமும் முக்கிய காரணம். கார்களையும் குறைத்து மதுவையும் தடுத்தால் போதும்.

 

 

உருப்பட உத்திகள்!

இருக்கும் சாலையில் தற்போது ஓட்டத்திலுள்ள கார்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். எப்படி? டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தது போல நாடு முழுவதும் வாரம் ஒருநாள் வாகன ஓட்டத்தை நிறுத்தலாம்! இன்னோவா காரில் ஒரே ஒருவர் பயணிப்பதை பார்த்து எனக்கெல்லாம் வயிறு எரியும்! இது என்ன ஏழைகளின் தேசமா இல்லை பூர்ஷாவின் நாடா என்று!

*  ஒரு வாகனத்தின் அனுமதிக்கப்பட்ட சீட் எண்ணிக்கையில் பாதிப்பேருக்கு குறைவாக பயணம் செய்தால் சீட்டுக்கு ரூ. 100 அபராதம் விதிக்க வேண்டும்!

* வெளிநாடுகள் சிலவற்றில் இருப்பது போல, கார்களில் மீதமிருக்கும் சீட்டை நிரப்ப பஸ்ஸ்டாப்பில் இருப்போரை ஏற்றிக்கொண்டு டிக்கட் சார்ஜ் பெற்றுக்கொள்ள அனுமதிக்கலாம்!

* இவையெல்லாம்விட, பொதுபோக்குவரத்தை குறிப்பாக – பஸ்கள், டாக்ஸிக்கள் – எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்!

*  சைக்கிளையும் இருசக்கர வாகன உபயோகிப்பையும் ஊக்குவிக்க வேண்டும். டூவீலர் டாக்சி மற்றும் வாடகை கடைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்!

* மினிபஸ், ஷேர் ஆட்டோ, அதிக வசதி, குறைந்த அடைசலோடு, அனைவரும் ஏறிக்கொள்ள விரும்பும் வண்ணம் மாற்றி அமைக்கவேண்டும்! உள்ளூர்  லோக்கல் டிரெயின்கள் அதிகரிக்க வேண்டும்!