தேச ஒருமைப்பாட்டுக்கு பங்களிப்பவர்களுக்கு படேல் பெயரில் உயரிய விருது – மத்திய அரசு அறிவிப்பு

நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்குப் பங்களிப்பவர்களுக்கு, சர்தார் வல்லபபாய் படேல் பெயரில் உயரிய விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்குப் பங்களிப்பவர்களுக்கும், நாட்டு ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் “சர்தார் படேல் தேசிய ஒருமைப்பாட்டு விருது’ வழங்கப்படவுள்ளது. ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு தினமான அக்டோபர் 31-ஆம் தேதியன்று, இந்த விருது பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்படும்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் “பத்ம’ விருதுகள் வழங்கும் விழாவின்போது, இந்த விருதும் வழங்கப்படும். இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதை வழங்குவார். அவர்களுக்கு பதக்கமும், விருதுக்கான சான்றிதழும் அளிக்கப்படும். ரொக்க வெகுமதி எதுவும் வழங்கப்படாது.

இந்த விருதுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவை பிரதமர் அமைப்பார். அக்குழுவில் கேபினெட் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர், குடியரசுத் தலைவரின் செயலர், உள்துறைச் செயலர் ஆகியோர் இடம்பெற்றிருப்பர். மேலும், பிரதமரால் தேர்ந்தெடுக்கப்படும் 3 முதல் 4 நிபுணர்களும் இக்குழுவில் இடம்பெறுவர்.

ஆண்டுக்கு 3 நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். மிகவும் அரிதாக மட்டுமே காலமானவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இந்தியாவைச் சேர்ந்த தனிநபரோ, நிறுவனமோ, அமைப்போ இந்த விருதுக்கான நபர்களைப் பரிந்துரை செய்யலாம். குறிப்பிட்ட தனிநபர்கள் தங்களைத் தாங்களே பரிந்துரை செய்யலாம். மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும், மத்திய அமைச்சகங்களும் இந்த விருதுக்குத் தகுதியான நபர்களைப் பரிந்துரை செய்யலாம்.

விருதுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே இந்தப் பரிந்துரைகளை அனுப்ப வேண்டும். மதம், இனம், ஜாதி, பாலினம், பிறப்பிடம், வயது, தொழில் ஆகிய பாகுபாடில்லாமல், இந்தியக் குடிமக்கள் எவரும் இந்த விருது பெறத் தகுதியுடையவர்கள் ஆவர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.