தேசிய மூத்தோர் தடகள போட்டியில் 4 பதக்கங்களை வென்ற முதியவர்

திருவள்ளூர் பகுதியை சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர், கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய மூத்தோர் தடகள போட்டியில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், புணேவில், 44-வது தேசிய மூத்தோர் தடகள போட்டி, கடந்த வாரம் நடைபெற்றது. இந்திய மூத்தோர் தடகள கூட்டமைப்பு சார்பில், பிப். 13 முதல் 17-ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மூத்த தடகள வீரர்கள் பங்கேற்றனர்.

இதில், திருவள்ளூர் அருகே உள்ள கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்த தடகள வீரரும், ஓவியருமான சாமுவேல் (76) பங்கேற்றார். இந்த தடகள போட்டியில், நீளம் தாண்டுதலில் 3.60 மீட்டர் தூரம் தாண்டியும், உயரம் தாண்டுதலில் 1.10 மீட்டர் தாண்டியும், 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்றும் முதல் இடம் பிடித்து, 3 தங்கப் பதக்கங்களை வென்றார். மேலும் சாமுவேல், மும்முறை தாண்டுதல் போட்டியில் 7.68 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார்.

கடந்த 2005 -ம் ஆண்டு முதல் தேசிய அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை வென்றுள்ளார் சாமுவேல். இவர், கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ‘ஆசிய மூத்தோர் தடகள சாம்பியன் ஷிப்-2023’ போட்டியில் பங்கேற்று உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போட்டிகளில் 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது