தேகம் காக்கும் களரி, தேசம் காத்த களரி!

ற்காப்பு கலைகளிலேயே நமது மண் சார்ந்த கலை களரி. இது தற்காப்பு கலை மட்டுமல்ல.  நமது உடலியல், உளவியல் நலத்தை ஏற்படுத்துவது. களரிப்பயட்டு என்பது தெக்கன்களரி வடக்கன்களரி என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.  வெவ்வேறு இடங்களில் பயிற்றுவிக்கப்பட்டு வந்ததால் இந்த பெயர்கள். தங்களை தற்காத்துக் கொள்வதற்கான இதுபோன்ற பயிற்சிகள் அத்தியாவசியம்.  எந்த ஆயுதங்களும் இல்லாமல் தங்களை தாக்க வருபவர்களிடம் எதிர்தாக்குதல் நடத்த முடியும். களரியை எடுத்துச் செல்வதற்கான  தேவை இந்தச் சமூகத்தில் அதிகம் இருக்கிறது.  இன்றைக்கு நமது வாழ்வியலே மாறிவிட்ட காரணத்தால்தான் நாம் பல நோய்களை சந்திக்கிறோம். நமது வாழ்வியலிலேயே கலந்திருந்த உடற்பயிற்சி இன்றைக்கு இல்லாமல் போய்விட்டதால் நாம் அவசியம் உடற்பயிற்சிகள் மூலம் உடலை தயார்படுத்த வேண்டியிருக்கிறது. இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கு, ஜிம்மில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் உகந்ததல்ல.

tredition-art

பெண்கள் ஆணுக்கு நிகரானவர்கள் என்று சொல்வார்கள். உண்மையில் ஆண்களைவிட திறன் வாய்ந்தவர்கள் பெண்கள். எல்லாவற்றிலும் ஆண்களைக் காட்டிலும் சிறந்து விளங்கக்கூடிய ஆற்றல் பெண்களுக்கு இருக்கிறது. சரியான பயிற்சிகளை மேற்கொள்ளும்போது அப்படியொரு பலத்தைப் பெண்களாலும் பெற முடியும். பலம் குறைந்தவர்கள் மீதுதான் வன்முறை கையாளப்படுகிறது. பெண்களும் பலமடைந்து விட்டார்கள் என்றால் வன்முறைகளை எதிர்த்து நிற்கலாம். களரி போன்ற நமது வாழ்வியல் சார்ந்த கலையை கற்றுகொள்வதன் மூலம் உடல்நலம், தற்காப்பு இரண்டையும் உறுதிப்படுத்த முடியும்.

யோகா பயிற்சி, உடற்பயிற்சி, குறுவடி(சிறிய கம்பு), நெடுவடி(நெடுங்கம்பு), ஈட்டி, வாள், கேடயம், வெட்டுக்கத்தி, சுருள்வாள் என பலவற்றையும் உள்ளடக்கியதுதான் களரி. களரியில் துண்டு முறை என ஒரு பாடம் உள்ளது.  அதன்படி பெண்கள் தங்களது துப்பட்டாவைக் கொண்டே எதிராளியின் தாக்குதலைத் தடுத்து, வீழ்த்த முடியும்.  முறையான களரிப் பயிற்சி மேற்கொள்ளும் நிலையில் ஆயுதமே இல்லாமல் போர் புரியும் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

களரிப்பயட்டு, தென்னிந்திய போர்கலை, தற்காப்பு கலை, இன்றுள்ள தற்காப்பு கலைகளுக்கெல்லாம் தாய்க்கலை. ஆசான் அகஸ்திய முனிவர் தான் கற்ற யோகக்கலைகளை மக்களுக்கு அருளுவதற்காக தன் குருவின் ஆணைக்கு இணங்க தென்பகுதி நோக்கி வந்தார். வரும்வழியில் காட்டு மிருகங்கள், வழிப்பறித் திருடர்கள் தொல்லை  இருப்பதைக் கண்டார். மக்களை இதிலிருந்து காத்துக்கொள்ள களரிப்பயட்டு உருவாக்கினார்.  இந்தக் கலையின் சக்தியினால் பாரதத்தின் தென்பகுதி பெருமளவில் அந்நிய படையெடுப்பால் அழியவில்லை. பெரும் கோயில்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இக்கலை வெறும் தற்காப்பு கலையாக மட்டும் அல்லாமல், மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவுகிறது. உடல், மனம், உயிர்சக்தி பலம் பெற உதவுகிறது. நம் நாட்டின் கலாச்சாரம்  உறுதிப்படுத்த களரி ஒரு கருவியாக  திகழும்.

களரி ஆசான்கள் : கிரிதரன் (வடக்கன் களரி) – 72006 46946

                       குமரேசன் (தெக்கன் களரி) –  91595 31759