தென்மாவட்ட ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் தடுத்து நிறுத்தம்: திடீர் நடவடிக்கையால் பயணிகள் அவதி

தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்ததைத் தொடர்ந்து (வியாழக்கிழமை) தென்மாவட்டங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழக அரசும், அவ்வாறு இயக்க அவகாசம் தர வேண்டும் என்று உரிமையாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, ஜன.24-ம் தேதி புதன்கிழமை முதல் ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சிஎம்டிஏ அமைச்சர் சேகர்பாபு, போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டனர். மீறுவோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனால், புதன்கிழமை பிற்பகல் முதலே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இரவு 7 மணிக்கு மேல் தென்மாவட்டங்களுக்கு புறப்பட்டு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து பயணிகளுடன் இயங்க கூடாது என்று போலீஸார் தொடர்ந்து அறிவுறுத்தியபடி இருந்தனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் தென்மாவட்டங்களில் இருந்து வந்த 217 ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதில் 145-க்கும் அதிகமான பேருந்துகள் பார்க்கிங் பேவிலும், இதர பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்துக்குள்ளும் நிறுத்தப்பட்டன.
நேற்று தென்மாவட்டங்களில் இருந்து கிளம்பும் போது கோயம்பேடு செல்லும் என்று கூறப்பட்ட நிலையில், இன்று காலையில் கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். ஏற்கனவே அரசு விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், இனி ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தைப்பூசம், குடியரசு தினம், வார இறுதி என நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க துணை தலைவர் சலீம் ஆகியோர் கூறியதாவது: “ஆம்னி பேருந்துகளை ஜன.24 முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்ககூடாது என 2 நாட்களுக்கு முன்புதான் சுற்றறிக்கை வந்தது. 90 நாட்களுக்கு முன்பிருந்தே முன்பதிவு நடக்கிறது. 24-ம் தேதி பயணிக்க 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த தொடர் விடுமுறையையொட்டி 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரையும் கிளாம்பாக்கம் வரச் சொல்வது சாத்தியம் இல்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 50 கடைகள், 400 பேருந்துகள் நிறுத்துவதற்கான இடம் உள்ளது. கிளாம்பாக்கத்தில் ஒரு அலுவலகம் கூட ஒதுக்கப்படவில்லை. அங்கு எப்படி பேருந்துகளை இயக்க முடியும்.அங்கு நீர் தேங்கும் அபாயமும் உள்ளது. சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பேருந்துகளை அங்கு நிறுத்தச் சொல்வது நியாயமா. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அலுவலகம் போன்றவற்றை ஏற்பாடு செய்து தர வேண்டும்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.