தெனாலியில் ஹிந்துக்கள் கர்ஜனை

ஆந்திர மாநிலம் தெனாலியில் உள்ள காடி பாவி மையத்தில் உள்ள 102 ஆண்டுகள் பழமையான சீதாராமஞ்சநேயர் கோயிலை கடந்த 24ம் தேதி நகராட்சி அதிகாரிகள் இடிக்க முயன்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தகவல் பரவியதும் தெனாலி மக்கள் திரளாக திரண்டு வந்தனர். ஜே.சி.பி இயந்திரம் மூலம் கோயிலை இடிக்க முயன்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். பல பக்தர்கள் சாலையில் படுத்து மறியல் செய்தனர். காவல்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பழமையான கோவிலை ஆந்திர மாநில அறநிலையத்துறை அங்கீகரித்து, அதற்கான உத்தரவு 2010ல் வழங்கியது. அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களை அகற்ற நகராட்சிக்கு அதிகாரம் இல்லை. ஆனால், வேண்டுமென்றே போக்குவரத்துக்கு இடையூறு எனக்கூறி கோயிலை அகற்ற அதிகாரிகள் முயற்சிக்கின்றனர் என்பது காவல்துறைக்கு புரியவைக்கப்பட்டது. அரசாணை நகலைப் படித்துவிட்டு, கோயிலை இடிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று காவல்துறையினரும் அதிகாரிகளிடம் கூறினர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களை செய்ய வேண்டாம் என தெனாலி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.