தூத்துக்குடி கோயிலில் பழமையான ஓலைச்சுவடிகள்

சில நட்களுக்கு முன், ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குள், பழைய கோப்புகள் வைக்கப்பட்டிருந்த ஒரு பழமையான அறைக்குள் பல ஆண்டுகள் பராமரிப்பு எதுவும் செய்யப்படாமல் பூச்சிகளும் பூஞ்சைகளும் தூசுகளும் படிந்த நிலையில் தமிழ், கிரந்தம், தெலுங்கு, தேவநாகரி மொழியில் எழுதப்பட்டிருந்த 308 ஓலைச்சுவடிக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சூழலில், தற்போது தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோயிலில் பழமையான 13 ஓலைச்சுவடி கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பெரிய ஓலைச்சுவடி கட்டில் ஏழு திருமுறைகளும், மற்றொரு கட்டில் ஏழு திருமுறைகளோடு, காரைக்கால் அம்மையார் இயற்றிய திருப்பதிகங்களும் உள்ளன. இந்த ஓலைச்சுவடியை பிரதி செய்தவர் நம்பிக்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்த மாசிலாமணி என்ற குறிப்பு அதில் உள்ளது. மேலும், கொட்டாரக்குறிச்சியைச் சேர்ந்த ஆ. வைகுண்டம் பிள்ளை என்பவர் பிரதி செய்த சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம், பொ. அய்யன்பெருமாள் பிள்ளை என்பவர் பிரதி செய்த நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி, மாணிக்கவாசகர் இயற்றிய எட்டாம் திருமுறை என்று அழைக்கப்படும் திருவாசகம் அடங்கிய இரண்டு ஓலைச்சுவடிப் பிரதிகள், மாணிக்கவாசகர் இயற்றிய திருக்கோவை நானூறு எனும் சுவடி, அகத்தியர் தேவாரத் திரட்டு, திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, புராணசாரம், தோத்திரசகத் திருவிருத்தம், பதினொன்றாம் திருமுறை நூல்கள் (40), சங்க இலக்கிய நூலான திருமுருகாற்றுப்படை, திருமூலர் இயற்றிய பத்தாம் திருமுறை எனப்படும் திருமந்திரம் நூல், பன்னிரு திருமுறை சுவடிகள் இருந்தன. இதைத்தவிர, சங்கரராமேசுவரர் கோயிலில் உள்ள பாகம்பிரியாள் அம்பாளின் பெருமையை எடுத்துரைக்கும் நூலான அருள்தரும் பாகம்பிரியாள் திருப்பள்ளியெழுச்சி இருந்தது இதனை எழுதியவர் ஜானகிநாதன். பழனி கிருஷ்ணன் என்பவர் எழுதிய பாகம்பிரியாள் இரட்டை மணிமாலை என்ற சுவடியும் அதனுடன் இருந்தது. தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் உள்ள ஓலைச்சுவடிகளைத் திரட்டிப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் நூலாக்கம் செய்யவும் திருக்கோயில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு, நூலாக்கத் திட்டப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு, 195 கோயில்களில் இதுவரை கள ஆய்வு செய்து, 1 லட்சத்து 76 ஆயிரத்து 149 சுருணை ஏடுகளையும், 335 இலக்கியச் சுவடிகளையும், 26 செப்புப் பட்டயங்களையும் கண்டு பிடித்துள்ளனர்.