துபாய் செல்லும் இந்தியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ‘ஸ்பெஷல் விசா’

நம் நாட்டில் இருந்து துபாய் செல்லும் இந்தியர்கள் பயன்பெறும் வகையில், ஐந்து ஆண்டு காலத்துக்கான, ‘மல்டிபிள் என்ட்ரி விசா’வை துபாய் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், சர்வதேச அளவில் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்தியர்கள் அங்கு அதிக அளவில் வசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நம் நாட்டில் இருந்து ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும், 24 லட்சம் பேர் எமிரேட்ஸ் சென்றுள்ளனர். குறிப்பாக, சுற்றுலா நகரமான துபாய்க்கு சர்வதேச பயணியரின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு முன்பு கடந்த 2019ல், 19 லட்சம் இந்தியர்கள் துபாய் சென்றுள்ளனர். கொரோனா காலத்தில் அது வெகுவாக குறைந்தது. கடந்த 2022ல், அது 18 லட்சமாக இருந்த நிலையில், கடந்தாண்டு 24 லட்சமாக அதிகரித்துள்ளது.

நம் நாட்டில் இருந்து துபாய் செல்லும் பயணியர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 34 சதவீத அதிகரிக்கும் நிலையில், அங்கு வரும் வெளிநாட்டுப் பயணியர் எண்ணிக்கையில் இந்தியர்கள் முதலில் உள்ளனர். இந்நிலையில், இந்தியர்களின் வருகையை மேலும் அதிகரிக்கும் விதமாக, ஐந்து ஆண்டு காலத்திற்கான மல்டிபிள் விசா முறையை துபாய் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த விசா குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்படுவதாவது:

ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் மல்டிபிள் என்ட்ரி விசாவை, துபாயின் ஜி.டி.ஆர்.எப்.ஏ., என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த விசாவை விண்ணப்பித்த இரண்டு முதல் ஐந்து நாட்களில் பெற முடியும். இந்த விசா வாயிலாக துபாயில் 90 நாட்கள் தங்கலாம். இதை அதிகபட்சமாக 180 நாட்கள் வரை நீட்டித்து கொள்ளலாம். ஓராண்டில் 180 நாட்களுக்கு மேல் இந்த விசாவை பயன்படுத்த முடியாது. விசாவுக்கான காலக்கட்டத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் துபாய்க்கு செல்லலாம். அங்கிருந்து இந்தியாவுக்கும் திரும்பலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் இந்த விசா முறை, வர்த்தகம், விடுமுறை கால கொண்டாட்டம், தடையற்ற தொடர்பு ஆகியவை தொடர்பாக பயணம் செய்வோருக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது. இதனால், அதிகளவில் இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணியர் துபாய் செல்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.