தீவிரவாதத்துக்கு எதிராக போரிடும் இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவு அதிகரித்து வருகிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
விமானப்படை சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதி பிபின் ராவத், விமானப் படைத் தளபதி ஆர்.கே.பதாரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. உலக அமைதிக்காக பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை அழிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவு அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி அந்த நாட்டில் விஐபி ஆக வாழ்ந்து வந்தார். இந்தியாவின் நடவடிக்கையால் அவர் இப்போது சிறையில் இருக்கிறார். தீவிரவாதம் மூலம் இந்தியாவுக்கு எதிராக மறைமுக போரில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. பாலகோட் தாக்குதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடத்தை கற்பித்து வருகிறோம். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா தீரமாக செயல்படும்.
பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டுகளை வீசி அழித்தது. இதன்மூலம் எல்லை தாண்டி பதுங்கி இருந்தாலும் தீவிரவாதிகளை இந்தியா அழிக்கும் என்பதை உலகுக்கு எடுத்துரைத்தோம். நமது ராணுவ வலிமை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
நிலம், கடல், வான் என எந்த வகையில் அச்சுறுத்தல் எழுந்தாலும் இந்திய பாதுகாப்புப் படைகள் அவற்றை தகர்த்தெறியும். கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு அதிகரித்திருக்கிறது. எல்லை தாண்டிய தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாத சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பேசும்போது, “கடினமான சூழ்நிலையில் இந்திய அரசியல் தலைமையும் ராணுவ தலைமையும் மிகச் சரியான முடிவை எடுத்துள்ளன. கார்கில், உரி தாக்குதல், புல்வாமா தாக்குதலின்போது எதிரிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
விமானப்படைத் தளபதி பதாரியா பேசும்போது, “இந்திய விமானப்படையில் விரைவில் ரஃபேல் போர் விமானங்கள் சேர்க்கப்படும். இதன்மூலம் விமானப்படையின் பலம் மேலும் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.