திறப்பு விழாவில் பெயர்ந்து விழுந்த நெல்லை பஸ் ஸ்டாண்ட் கூரை

திருநெல்வேலியில் அரசு துறைகளின் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட மாநகராட்சியின் பஸ் ஸ்டாண்ட் கட்டட முதல் மாடி கூரை திறப்பு விழாவின் போது காரை பெயர்ந்து விழுந்தது. திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தை இடித்து விட்டு புதிதாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.85 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. 2018ல் துவங்கிய கட்டுமான பணிகள் ஐந்தாண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் நிறைவுற்றது. இக்கட்டுமானத்திற்கான உள்ளூர் திட்ட குழுமத்தின் அனுமதி பெறப்படவில்லை. தீயணைப்பு, நெடுஞ்சாலை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், போக்குவரத்து ஆணையர், சுகாதாரம் உள்ளிட்ட அரசுத் துறைகளின் அனுமதியும் பெறப்படவில்லை.

இதற்கிடையில் திருநெல்வேலியில் தி.மு.க., நிர்வாகிகளின் இல்ல திருமண விழாவிற்கு அமைச்சர் உதயநிதி வந்ததையொட்டி நேற்று பல்வேறு அரசு திட்ட பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி பங்கேற்றார். திறப்பு விழாவின் போது முதல் மாடி கூரை காரை பெயர்ந்து விழுந்தது. அதனை ஆய்வு செய்த அதிகாரிகள், காண்ட்ராக்டர்கள் அவசர அசரமாக இடிந்த பகுதியை சரி செய்தனர்.

பஸ் ஸ்டாண்ட் கட்டடம் முன்பு இருந்ததை விட போதிய பஸ்கள் நிற்கும் அளவில் இல்லை எனவும் ஒரு வணிக வளாகம் போல நூற்றுக்கணக்கான கடைகளை கட்டி நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புலம்பினர். கோஷ்டி பூசலால் கிழிந்த பிளக்ஸ்: திருநெல்வேலி மாவட்ட தி.மு.க.,வில் கோஷ்டி பூசலுக்கு குறைவில்லை. அரசு விழா மற்றும் நிர்வாகிகளின் இல்ல திருமண விழாக்களில் அமைச்சர் உதயநிதியை வரவேற்று வைக்கப்பட்ட வரவேற்பு பதாகைகள், பிளக்ஸ் போர்டுகளை கட்சியினரே போட்டி போட்டு கிழித்து கொண்டனர்.