‘திறன் கல்வியை மேம்படுத்தினால் பொருளாதார இலக்கை எட்டலாம்’ நிபுணர்கள் கருத்து

‘இளைஞர்களுக்கு திறன் கல்வியை வழங்கினால், தமிழக அரசின் 1 டிரில்லியன் டாலர் என்ற, 83 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார இலக்கை எட்டலாம்’ என, நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று துவங்கியது. இன்றும் மாநாடு நடக்கிறது. மாநாட்டு வளாகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்களுடன் சிறப்பு கருத்தரங்குகள் நடக்கின்றன. இதில், ‘எதிர்காலத்துக்கான திறன்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கமும் நடைபெற்றது.

அதில், தமிழக திறன் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் இன்னசன்ட் திவ்யா, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, டாடா பவர் நிறுவனத்தின் சி.இ.ஓ., பிரவீர் சின்ஹா, நாஸ்காம் நிறுவனத்தின் சி.இ.ஓ., கீர்த்தி சேத்,, காக்னிசன்ட் நிறுவன முன்னாள் தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி ஆகியோர், முதலீடுகள் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து உரையாற்றினர்:

அவர்கள் பேசியதாவது: தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், டேட்டா அறிவியலுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முந்தைய காலங்களிலும் டேட்டாக்கள் கிடைத்தன. அதனை நாம் இந்த அளவுக்கு பயன்படுத்தவில்லை. தற்போது எல்லா துறைகளிலும், டேட்டா என்ற தரவுகள், தொழில் வளர்ச்சிக்கு பயன்படுகின்றன.

அதேபோல, திறன் மேம்பாடுக்கும் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுதும் பட்டப்படிப்பு முடித்த, திறன் கல்வி பெற்றவர்கள் தேவைப்படுகின்றனர். நம் மாணவர்களுக்கு பாடத்திட்டத்துடன் சேர்த்து, திறன் கல்வியையும் இணைத்து கொடுத்தால், அனைவரும் தொழில் முனைவோர்களாகவும், வேலைவாய்ப்புக்கு தகுதியுள்ளவர்களாகவும் மாறுவர்.

திறன் கல்வியை மேம்படுத்தினால், தமிழக அரசின், 2030ம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலர் என்ற, 83 லட்சம் கோடி என்ற பொருளாதார இலக்கை எளிதில் அடையலாம்.
இதன் காரணமாகவே, தமிழகத்தில் திறன் மேம்பாட்டு கழகம் ஏற்படுத்தி, தொழில் நிறுவனங்களையும், கல்வி நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, மாணவர்களுக்கு திறன் கல்வி வழங்கப்படுகிறது.

சென்னை ஐ.ஐ.டி., சார்பில், ஆன்லைன் வழியில் தொழில் முனைவோருக்கான படிப்புகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் யு.ஜி.சி., மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., அமைப்புகளின் உத்தரவுப்படி, கல்லுாரி மாணவர்களுக்கு விருப்ப பாடம் மற்றும் தொழிற்கல்வி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் பேசினர்.