திருவெம்பாவை 12

ஆர்த்த,  தீர்த்த, கூத்தன், வார்த்தை, பூத்திகழ், ஏத்தி என்று வல்லின “த” எழுத்தினை இப்பாசுரத்தின் ஒவ்வொரு வரியின் தொடக்க வார்த்தைகளும் ஏந்திக் கொண்டு பாசுரத்திற்கு மதிப்புக்கூட்டல் ஏற்றுவது தெரியும்.

“தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையை சிரசில் கொண்டவன் நமது நாதனான எம்பிரான். சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில் அக்னியுடன் காலைத் தூக்கி நடனமாடும் கலைஞன் அவன்.

வானத்தையும், பூலோகத்தையும், பிற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மைகளைக் கொண்டவன். இத்தகைய பெரும் பண்புகளைக் கொண்ட நம் தலைவனான சிவபெருமானின் பொற்பாதத்தை வணங்குவோம். நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, சிவாயநம என்னும் ஐந்தெழுத்து நாமத்தைச்  சொல்லி, அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.

ஐம்பூதங்களையும் தன்னுள் அடக்கி முத்தொழில்களையும் ஒரு விளையாட்டாகக் கொண்டுள்ள அந்த இறைவனின் திருவடிகளை எப்போதும் நினைத்து பற்றி, போற்றிப் பாடி நிற்க வேண்டும் என்ற கருத்தைப் பறை சாற்றுகிறது இப்பாசுரம்.