ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.
விளக்கம் ;
பிறவிப் பிணி தீருவதற்காக நாம் பேரொலி எழுப்பியபடி நீராடும் அந்தப் புனிதநீரே சிவபெருமான்தான்.(மொய்யார் தடம் பொய்கை எனத்தொடங்கும் முந்தைய பாடலில் நோன்பிருக்கும் மகளிர் ஒரு சுனையில் முகேரென ஒலியெழும்படிப் பாய்ந்து குளிப்போம் என்று பேசினர். அவனோ தில்லைச் சிற்றம்பலத்தில் கையில் தீச்சட்டியை ஏந்தியபடி நடனம் ஆடுபவனாக இருக்கிறான். அவன் வானையும் மண்ணையும் பிறவுலகங்களையும்(குவலயமும்
எல்லாமும் படைத்தும் காத்தும் அழித்தும் மறைத்தும் அருளியும் செய்வதான ஐந்தொழில்களையும் விளையாட்டாகச் செய்துவிடுகிறான். நாம் பேசியபடியே, நமது கை வளையல்கள் ஒலிக்க, மேகலைகள் சத்தமிட, நமது கூந்தலில் சூட்டியுள்ள பூக்களில் வண்டுகள் ரீங்காரிக்க பலவித மலர்கள் கொண்ட வனத்தால் சூழப்பட்ட இப்
பொய்கையில் நீந்தி விளையாடுகிறோம். அதே சமயத்தில் நம்மை உடையவனான அரனின் பொற்பாதங்களையும் புகழ்ந்து பாடியபடியே இந்தப் பெருஞ்சுனையில் நீராடலாம், வாருங்கள் என்கின்றார்கள் தோழிகள்.
மதம் தொடர்பான சம்பிரதாயங்களும் சடங்குகளும் நம்மை ஆன்மிகத்தின் தொடக்க நிலைகளில் நெறிப்படுத்துகின்றன. நமது பக்தியும் சாதனையும் உறுதிப்படும்வரை நாம் தொடர்ந்து இறைவடிவான புறச்சின்னங்களை அணிவதும், அவற்றை அணிவதற்கான நமது உரிமையை நிலை நாட்டிக் கொள்வதும் இன்றியமையாதது. . நாம் அன்றாடம் இவற்றைக் கைக்கொள்வதோடு, நமது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் இதை உணர்த்த வேண்டும்.