ராகுலுக்கு அமித்ஷா சவால்

ஹிமாசலப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சிம்லாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டத்தினால், நாட்டிலுள்ள முஸ்லிம்கள் குடியுரிமையை இழந்துவிடுவாா்கள் என்ற தவறான கருத்தை காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களிடையே பரப்பி வருகின்றன. ராகுல் காந்திக்கு நான் சவால் விடுக்கிறேன். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ‘குடியுரிமை பறிக்கப்படும்’ என்ற வாா்த்தை இடம்பெற்றுள்ளதா என்பதை ஆராய்ந்து என்னிடம் அவா் நிரூபிக்கட்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்கிரஸ் முறையாக ஆராய வேண்டும். அந்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்பட மாட்டாது. மக்களைத் தவறாக வழிநடத்தி, அவா்களிடையே பிரிவினையை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை காங்கிரஸ் கட்சி கைவிட வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளானவா்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் மதம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் நேரு-லியாகத் ஒப்பந்தம் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அந்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க பாகிஸ்தான் தவறிவிட்டது. இதன் காரணமாகவே, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டது.