திருவெம்பாவை – முதல் பாடல்

மணிவாசகர் நோன்பு நோற்கும் முகமாக அண்ணாமலையான் நாமத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே உள்ளம் உருகித் துவண்டு உருளும் தோழி ஒருத்தி, உறக்கத்தை வளர்த்ததற்கு வெட்கப்படும் நிலை, மற்றொருத்தி துயிலணையில் நாணமின்றி தூக்கம் தொடர்ந்த நிகழ்வையும் முன் நிறுத்துகிறார். திருவெம்பாவை  நவசக்திகளும் தமக்குள் துயில் உணர்த்தும் தன்மையை உணர்த்துவது.

தோழிகளின் துயில் மயக்கத்தைத் தெளிவித்து, அவர்களுடைய உறுதியின்மையால் தாம் தளர்வுறாது, இறைவன் பால் ஒருமைப்பட்ட தம் மனத்தால் அவர்களையும்  கருணைக் கடலான சிவபெருமானைப் பாடத் தேற்றி எழுப்புகின்றனர். எழுப்புவதற்காக இவர்கள் கைக்கொள்ளும் உய்த்துணர வைக்கும் உத்தியாக, ஒளி பெற்ற விசாலமான கண்களையுடைய பெண்ணே! என்று விளிக்கின்றனர். “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி”, என்ன அருமையான அமுத வாக்கு. இறைவன் ஜோதி மயம் ஆனவன். இன்ன காலத்தில் தோன்றிய ஜோதி என்று காலவரம்புக்கு உட்படாதது. முதலும் முடிவும் இல்லாதது. சிவனை வாழ்த்திய ஒலி கேட்ட மாத்திரத்தில், அன்புள்ள ஒருத்தி ஆனந்த மேலீட்டால் மெய்மறந்து இருக்கிறாள். இந்த அன்பின் காட்சியால், “இது அல்லவா சிவ பக்தி, இத்தன்மையை நீ ஏற்று ஆராய்ந்து பார்,” என்கிறார்கள்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி