திருவான்மியூரில் பெண்கள் குழுவாக நடத்திய திருவிளக்கு பூஜை

இந்து சமயத்தில் திருவிளக்கு வழிபாடு உன்னதமானதான இடத்தைப் பிடித்துள்ளது. எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை நம் இல்லத்தில் எழுந்தருளச் செய்வதே விளக்கு வழிபாடாகும். ஆதியில் வேதரிஷிகள் ஹோமம் வளர்த்து இறைவனை வழிபட்டனர். இந்த முறையே தற்போது தீப வழிபாடாக மாறியிருக்கிறது.வீட்டின் வாசலை மெழுகி மாக்கோலம் இட்டு அதன் மத்தியில் விளக்கை ஏற்றிவைத்து,  அதனை வீட்டு பூஜையறையில் வைத்தால் அவ்விளக்குடன் மகாலட்சுமியும் நம் இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம்.

தற்போது பெண்கள் குழுவாக சேர்ந்து கோயில்களில் விளக்கு வழிபாடு செய்வது பிரபலமடைந்து வருகிறது. “”எந்த ஊர் மக்கள் இந்த விளக்குப் பூஜையை கூட்டு பிரார்த்தனையாக மேற்கொள்கிறார்களோ, அந்த ஊரானது செழிப்பாக இருக்க வேண்டும். ஊர் மக்கள் அனைவரும் நலமோடு வாழ வேண்டும்,” என்ற எண்ணத்திலும் இந்த பூஜையானது மேற்கொள்ளப்படுகிறது.

அந்த வகையில் திருவான்மியூர் கிழக்குக் கடற்கரைச் சாலையில், ராஜாஜி நகரில் வீற்றிருக்கும் ஶ்ரீராஜகணபதி ஆலயத்தில் வருடா வருடம்  தைமாத , வெள்ளிக்கிழமையில் நடக்கும் திருவிளக்கு பூஜை கடந்த எட்டாம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பம்சமே   2001 முதல் தொடர்ந்து கடந்த 20 வருடங்களாக ஶ்ரீ ராஜகணபதி ஆலய அறக்கட்டளையினரால் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது என்பதுதான். வழக்கம் போலவே இந்தப் பகுதியில் வசிப்போரில்    108  பெண்கள் பூஜையில் கலந்து கொண்டனர். வரிசையில் தயாராகப் போடப் பட்டிருக்கும் இலை முன் பெண்கள் அமர, பூஜை தொடங்கியது. முதலில் ஸங்கல்பம் மற்றும் ஶ்ரீகணபதி பூஜை. அதன் பின்னர் ஶ்ரீதுர்கை, ஶ்ரீலக்ஷ்மி, ஶ்ரீஸரஸ்வதி அஷ்டோத்தர அர்ச்சனை நடைபெற்றது. பின்னர் ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமாவளி அர்ச்சனை மற்றும் ஶ்ரீ லலிதா அஷ்டோத்திர அர்ச்சனை நடைபெற்றது. அர்ச்சனையின் போது எல்லாப் பெண்களும் விளக்கு களுக்கு அர்ச்சனை செய்து ஸ்ரீ மஹாலக்ஷ்மி அம்பாளை பிரார்த்திக்குக் கொண்டனர். அதன் பின் தீபாராதனை, எல்லாப் பெண்களுக்கும் அம்பாளின் பிரஸாதம் வழங்கப் பட்டன.   அதன்பின் பூஜைக்கு வருகை வந்த எல்லா பக்தகோடிகளுக்கும்  பிரஸாதம் வழங்கப் பட்டது.  பங்கு பெற்றோருக்கு நினைவுப் பரிசுப் பொருளும் வழங்கப்பட்டது. .ஆலய அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும்  தன்னார்வத் தொண்டர்கள் ஒத்துழைப்புடன்  விழா மிகவும் சிறப்பாக, நடந்து முடிந்தது.