திருமலையில் தடையை மீறி பறந்த ட்ரோன் கேமரா: அசாம் பக்தர்களிடம் விசாரணை

திருமலையில் தடையை மீறி ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்ததால், அசாம் மாநில பக்தர்களிடம் தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமலையில் தனியார் நிறுவனங்கள், பக்தர்கள் ட்ரோன் கேமரா உபயோகிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி தேவஸ்தானம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆதலால், அலிபிரி அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியிலேயே ஸ்கேன் செய்யும்போது மது, சிகரெட், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், மாமிசம், துப்பாக்கி, ட்ரோன் கேமராக்கள் இருந்தால் அவற்றை தேவஸ்தான கண்காணிப்பு ஊழியர்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த சில பக்தர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக திருமலைக்கு சொந்த காரில் வந்துள்ளனர். ஆனால் இந்த காரை தேவஸ்தான ஊழியர்கள் சரிவர சோதனையிடவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இவர்கள் திருமலைக்கு சென்று அறை எடுத்து தங்கி, சுவாமியை தரிசித்து விட்டு, பல இடங்களை சுற்றிபார்த்துள்ளனர். அதன் பின்னர், நேற்று மதியம் இவர்கள் காரில் மீண்டும் திருப்பதிக்கு இறங்கி வந்த போது, 53வது வளைவில், காரை நிறுத்தி அசாம் தம்பதியினர் ட்ரோன் கேமரா மூலம் திருமலையின் அழகை படம் பிடித்தனர். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கும், விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில், அலிபிரி மலைஅடிவாரத்தில், அசாம் தம்பதியினரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் திருமலையில் எந்தெந்த இடங்களில் ட்ரோன் கேமராவை உபயோகப்படுத்தி உள்ளனர் என்பதை அறிய, ட்ரோன் கேமராவையும் பறிமுதல் செய்துள்ளனர்.