திருப்பாவை – 9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

விளக்கம்;

ஒளி பொருந்திய நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில்,சுற்றிலும் விளக்கெரிய, சுகந்த மணத்தை உள்ளடக்கிய த்ரவ்யங்களின் வாசனை கம கமவென்று வீச, பளிச் என்று கண்ணைப்பறிக்கும் அழகிய
பஞ்சுமெத்தையில் துயிலும் எங்கள் மாமன் மகளே! உனது இல்லத்து மணிக்கதவைத் திறப்பாயாக!! எங்கள் அன்பு மாமியே! அவளை தயை கூர்ந்து நீவிர் எழுப்புவீராக ! உன் தவப் புதல்வியை எத்தனை நேரமாக நாங்கள் கூவிக்கூவி அழைக்கிறோம்!

எவ்வித பதிலும் கூறாமல் இருக்கிறாளே, அவள் ஊமையா? அல்லது செவிடா? சோம்பல் அவளை அரவணைத்துக் கொண்டதா ? அல்லது துயில் எழ இயலாத அளவுக்கு மந்திர முடிச்சு என்று ஏதாவது ஒன்றில் சிக்கிக்கொண்டு
தவிக்கிறாளா ??!! துயிலெழு உடனே, எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு பதி, வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் ஸ்ரீமந் நாராயணனின் திருநாமங்களைச் சொல்.

கருத்து: மாயை நிறைந்த சுகபோக வாழ்க்கையில் சிக்குண்டு சோம்பலில் திளைத்து மக்கள் உழல்கின்றனர். இவர்களை இவற்றிலிருந்து மீட்டு, ஸ்ரீமந்நாராயணன் இருப்பிடமான வைகுண்டமே நிலையான ஸ்தலம் என்பதை உணர்த்த வேண்டும். அதனை அடைய அவனது திருநாமங்களை உச்சரிக்க வேண்டும்.