ஸ்ரீலங்காவில் உள்ள அகதிகளுக்கு ஏன் குடியுரிமை அளிக்கப்படவில்லை?

சட்டத் திருத்தம் மதரீதியாக கொடுமைப்படுத்தப்பட்ட இந்திய வம்சாவளியினரின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவைப் பொருத்த வரை, அங்குள்ள மொழி அடிப்படையிலான, இன அடிப்படையிலான பாரபட்சத்தால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளனர். அவர்கள் அந்த நாட்டில் அரசியல் அதிகாரம் பெற்றவர்கள்; ஆனால், பெரும்பான்மை சிங்களவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் நாடுகளில் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினருடன் ஒப்பிடக் கூடாது. தவிர, தமிழகத்தில் அகதியாக இருந்தாலும், ஈழத்தமிழர்கள் தங்கள் தாயகம் (ஸ்ரீலங்கா) திரும்பவே துடிக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்போதும் சட்டவிரோதமாக கள்ளத் தோணியில் குடும்பத்துடன் ஸ்ரீலங்கா செல்லும் ஈழத் தமிழர்கள் பலர் உள்ளனர். மேலும், அவர்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்வது அவர்களது பல்லாண்டுகால உரிமைகளை தங்கள் சொந்த நாட்டில் இழப்பதாகிவிடும். மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பினர் அந்நாட்டு அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போரை நடத்தியதால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள்.

இன்று அரசியல் சூழல் மாறியுள்ளது. விடுதலைப்புலிகளும் இப்போது இல்லை. எனவே மாறியுள்ள சூழலின் அடிப்படையில், நட்பு நாடான ஸ்ரீலங்கா அரசுடன் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது. 1977, 1983 இனக்கலவரங்களை அடுத்து ஸ்ரீலங்காவில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர். அவர்களில் பலர் அந்நாட்டுக்கே திரும்பிவிட்டனர். தற்போது, 107 இலங்கை அகதி முகாம்களில் சுமார் 64,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீள அவர்களது நாட்டிலேயே குடிபுகச் செய்வதுதான் அவர்கள் இழந்த உரிமைகளை மீட்க உதவியாக இருக்கும்.

அதே சமயம், அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு குடியுரிமை அளிப்பது பற்றி அரசு சிந்திக்க வேண்டும். இருப்பினும், இப்போதுதான் இதற்கான விவாதம் துவங்கி உள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக, ஏற்கனவே, ஸ்ரீலங்காவிலிருந்து வந்த பல்லாயிரக் கணக்கான மலையகத் தமிழர்களுக்கு 1964ஆம் வருடத்திய சிறிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தப்படி இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் தேவைப்படின் ஈழத் தமிழ் அகதிகள் வேண்டுகோளை முன்வைத்தால் அவர்களுக்கென புதிய சட்டத் திருத்தம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே விவாதத்தைத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது ஈழத் தமிழ் அகதிகளுக்காக தமிழகத்தில் நீலிக் கண்ணீர் விடும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் ஏன் அவர்களை இந்தியக் குடிமக்கள் ஆக்க நடவடிக்கை எடுக்கவில்லை? உண்மையில், அதற்கான வேண்டுகோள் ஈழத் தமிழ் அகதியிடமிருந்து இதுவரை வரவில்லை. அவர்கள் சொந்த ஊருக்குச் செல்லும் கனவுடன்தான் அகதிகள் முகாம்களில் தவிக்கின்றனர்.