கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்; கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய்! பாடிப் பறை கொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்,
ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.
விளக்கம்; அன்பிற்குரிய தோழியே!…பொழுது புலர்ந்து விட்டது… நன்றாக விடிந்து விட்டது… நீராட
எழுந்திரு!!”, என்று எழுப்புகிறார்கள் தோழிகள். "அதிகாலையில் கறுமையாக இருந்த
வானம் கிழக்குத் திசையில் வெளுத்து விட்டது. மிகவும் மந்தமான எருமைகளே எழுந்து
மேய்ச்சல் நிலம் நோக்கிப் போய்விட்டன. பெண்ணே நீ இன்னும் தூங்குவது சரியா? நீ
வரவேண்டும் என்பதற்காகப் பலர் கோயிலுக்குப் போகாமல் காத்திருக்கின்றனர்.
அவர்களின் காலும் மனமும் கடுக்க வைக்காமல் வேகமாய்த் எழுந்து வா…. ஓர்
அசுரனின் வாயைப்பிளந்து கொன்று, "சிறுவனுக்கு இவ்வளவு வலிமையா?' என நம்மை
வாய்பிளக்க வைத்தவன் கண்ணபிரான்.
தாய்மாமன் கம்சன் ஏவிய பல அசுரர்களை துவம்சம் செய்தவன். அவனது புகழைப்
பாடிய படியே, நாம் கோயிலுக்குச் செல்வோம். தேவாதி தேவனுமான கிருஷ்ணனை நாம்
ஆராதித்தால், அவன் அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே
கிளம்பு என்கிறார்கள்.