எந்த மதமாக இருந்தாலும் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை; குடியுரிமை சட்டம், என்ஆர்சி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்

வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள சிறுபான்மை மதத்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது தொடர்பான குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) சமீபத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

ஆனால், குடியுரிமை சட்டத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய முஸ்லிம் நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வந்துள்ள முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை. மற்ற இந்து, கிறிஸ்தவர், சீக்கியர் உட்பட 6 மதத்தினருக்கு குடியுரிமை வழங்க இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள், வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும் (என்ஆர்சி) மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதற்கிடையில், சிஏஏ மற்றும் என்ஆர்சி தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவற்றால் இந்திய முஸ்லிம்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா?

நிச்சயமாக இல்லை. முஸ்லிம்கள் உட்பட இந்தியாவில் உள்ள எந்த மதத்தவரும் கவலைப்பட வேண்டியதில்லை. எந்த இந்திய குடிமகனையும் இந்தச் சட்டம் பாதிக்காது. அவர்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. எனவே, சிஏஏ மற்றும் என்ஆர்சி.யால் இந்திய குடிமக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

அப்படியானால் இந்தியாவில் ‘குடியுரிமை’ என்பது எப்படி முடிவு செய்யப்படுகிறது?

ந்தக் கேள்விக்கு கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டத்திலேயே தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதில் இந்திய குடியுரிமை பெறுவதற்கான 5 விதிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.

1. பிறப்பால் இந்திய குடியுரிமை.

2. பெற்றோர் வழியாக (வம்சாவளியினர்)

3. உரிய ஆவணங்களை பதிவு செய்வதன் மூலம்

4. இயல்பாகவே

5. இந்தியாவின் எல்லைக்குள் ஒரு பகுதியை இணைப்பதன் மூலம்.

மேற்கூறிய 5 வழிமுறைகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றி ஒருவர் இந்திய குடியுரிமை பெற முடியும்.

அப்படியானால் மதத்தின் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் மக்கள் ஒதுக்கி வைக்கப்படுவார்களா?

இல்லவே இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது மதத்தின் அடிப்படையிலானது அல்ல. மேலும், எந்த மதத்தைப் பின்பற்றுபவராக இருந்தாலும், என்ஆர்சி.யில் யாரும் ஒதுக்கி வைக்கப்பட மாட்டார்கள். அப்படி செய்தால் அது சட்டத்துக்குப் புறம்பானது.

என்ஆர்சி.யில் மூன்றாம் பாலினத்தவர், நாத்திகர்கள், ஆதிவாசிகள், தலித்துகள், பெண்கள், நிலத்துக்கான ஆவணங்கள் வைத்துள்ளவர்கள், இல்லாதவர்கள் ஒதுக்கப்படுவார்களா?

இவர்களில் யாரையும் என்ஆர்சி ஒதுக்காது. தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்கான பணிகள் நடைபெறும் போது இவர்களில் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். யாரும் ஒதுக்கி வைக்கப்பட மாட்டார்கள்.

என்ஆர்சி கணக்கெடுக்க வரும்போது என் குடியுரிமையை நிரூபிக்க என்னுடைய பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை வழங்க வேண்டுமா?

என்ஆர்சி பதிவேடு பணிகள் நடைபெறும் போது, ஒருவர் பிறந்த தேதி, மாதம், ஆண்டு, பிறந்த இடம் ஆகிய தகவல்களை வழங்கினால் போதுமானது. இந்தத் தகவல்கள் இல்லாதவர்கள், தங்களுடைய பெற்றோரின் விவரங்களை கூறினாலே போதுமானது. அவர்களுடைய ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்திய குடியுரிமையை நிரூபிக்க பாஸ்போர்ட், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் ஆவணங்கள், பிறப்பு சான்றிதழ், பள்ளி மாறுதல் சான்றிதழ், வீடு மற்றும் நிலத்தின் ஆவணங்கள், அரசு நிறுவனங்கள் வழங்கியுள்ள ஆவணங்கள் வழங்கலாம். எனவே, எந்தவொரு இந்திய குடிமகனும் தேவையில்லாமல் தொந்தரவுக்கு ஆளாக மாட்டார்.

என்ஆர்சி.க்காக நான் எனது மூதாதையர்களின் விவரங்களை நிரூபிக்க வேண்டுமா? (1971-ம் ஆண்டு முன்போ அல்லது பின்போ).

தேவையில்லை. உங்கள் மூதாதையர்களைப் பற்றிய விவரங்களை நிரூபிக்க எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த என்ஆர்சி அசாம் மாநிலத்துக்கு மட்டுமானது. அதுவும் அசாம் ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும் என்ஆர்சி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

அசாம் மாநிலம் தவிர இந்தியாவின் மற்ற பகுதியில் எடுக்கப்படும் என்ஆர்சி கணக்கெடுப்பு முழுக்க முழுக்க வேறுமாதிரியானது. இது கடந்த 2003-ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தின்படி எடுக்கப்பட உள்ளது. என்ஆர்சி சட்டத்தையும் குடியுரிமை சட்டத்தையும் ஒப்பிடக் கூடாது. இரு சட்டங்களும் வெவ்வேறானவை.

ஒருவர் படிக்காதவராக இருந்தால், எந்த ஆவணங்களும் இல்லாதவராக இருந்தால் என்ன நடக்கும்?

அந்த சூழ்நிலையில், தன்னுடைய அடையாளத்தை நிரூபிக்க சாட்சிகளை அழைத்து வந்து காட்டலாம். ஏதாவது ஆதாரம் காட்டலாம், தன்னுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களை அளிக்கலாம். இது அவர்களுக்கு உதவும். அதன்பிறகு சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும். இதன்மூலம் எந்த இந்தியரும் தேவையில்லாமல் தொந்தரவுக்கு ஆளாகாமல் இருப்பது உறுதி செய்யப்படும்.

எனவே, மத ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சி நடப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.