திருப்பாவை 29

கறவைகள் பின்சென்று என்ற பாசுரத்தில் தங்கள் கைகளில் உபாயமாயிருப்பதொன்றுமில்லை; கண்ணனே பூர்ணமான உபாயம் என்றார்கள் தோழிமார். இப்பாசுரத்தில், தாங்கள் விரும்பும் பலம் கைங்கர்யமே என நாம் அனுபவித்துவரும் இத்திருப்பாவையின் பரம தாத்பர்யத்தைச் சொல்லித் தலைக்கட்டுகிறார்கள். பகவத் விஷய ஞானம் உதிக்கின்ற வைகறைப் பொழுதில் அனைத்துத் தோழிமாரும் எழுந்து வந்ததனால் அக்கைங்கர்யமாகிற பலத்தை அடைவதில் தங்களுக்குள்ள அவசரத்தை அறிவிக்கிறார்கள். கண்ணனை வணங்கி, “அவனது திருவடிகளைப் போற்றும் காரணத்தைக் கண்ணன் கேட்டருள வேண்டும்” என்கிறார்கள்.

“பசுக்களை மேய்த்து உயிர் வாழும் தங்கள் ஆயர் குலத்துதித்த கோவிந்தனே! உன்னிடமிருந்து விரும்பியவற்றைப் பெற்றவுடன், விலகும் மக்களல்ல நாங்கள். எத்தனை பிறவி எடுத்தாலும், ஏழேழ் பிறவிகளிலும் உனக்கு உற்றார் உறவினராகவே இருந்து, உனக்கு மட்டுமே அடிமை செய்பவராக நாங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும்! இதை உணர்ந்து,எங்களின் மற்ற ஆசைகளை நீக்கி அருள வேண்டும் கண்ணா!” என்கிறார்கள்.

“இறைவனை அடைவதற்கு உண்மையான அன்பு மட்டும் போதும்.”