திருப்பாவை 2

வையத்து வாழ்வீர்காள் ! “வசித்தல் வேறு. குறையொன்றுமில்லாமல் இன்புற்று வாழ்தல் வேறு”. வாழ்வீர்காள் என்கின்ற சொற்குறிப்பினால் திருமால் கிருஷ்ணனாக அவதரித்த திருவாய்ப்பாடி வாழ்க்கைக்கு, பரமபத வாழ்வும் ஈடாகாது.  பரமபத வாழ்க்கை அனுபவிக்கும்படி இல்லாமையால் அன்றோ “அச்சுவை பெறினும் வேண்டேன்” என்கிறார் தொண்டரப்பொடி ஆழ்வார். “அவ்வுலகில் தயாதி குணங்களும் ஒளிவிட வாய்ப்பில்லாததால் கருடன் முதலிய நித்திய சூரிகளும் இங்கே வந்து அனுபவிக்கிறார்கள்,” என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை.

“நோன்புக் காலத்தில் நெய் உண்ணோம், பாலும் உண்ணோம், விடியற்காலை நீராடியபின் கண்ணிற்கு மை எழுதோம், கருக்குழலை மலர், மலர் சரங்கள் இட்டு முடியமாட்டோம். முன்னோர்கள் கட்டுப்பாடுடன் செய்யாது இருந்தவற்றை நாங்களும் செய்யோம். தீய சொற்களை எம்பெருமான் அருகில் சென்று மொழிய மாட்டோம், வறியவர்க்கு உதவுவோம், பிரம்மச்சாரிகளுக்கும் துறவிகளுக்கும் அன்னமிடுவோம், இப்படி பகவத் விஷயத்தை நினைப்பதே மகிழ்ச்சியாகும் என்கின்றபடி நோன்பு நோற்க உறுதி எடுக்குமுன் எவற்றைச் செய்யலாம், எவற்றை செய்யக்கூடாது என்பதை  இப்பாசுரத்தில் நோன்பு நோற்ற பெண்கள்.கூறுகிறார்கள்.