திருப்பாவை – 19

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!
மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை
எத்தனை போதும்! துயிலெழ ஒட்டாய்காண்!
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்!
குத்து விளக்குகள் எரிந்து அறையின் நால்புறமும் ஒளி வீச,யானையின் தந்தத்தால் ஆன உறுதியான  கால்களை உடைய  கட்டிலில்,விரிக்கப்பட்ட மென்மையான குளுமை, தூய்மை,கதகதப்பு , மணம் முதலின ஐந்துவகை குணங்கள் நிரம்பிய மூலப்பொருட்கள் சேர்ந்த கலவையில் உருவான   மெத்தையின் மீது ஏறி,கொத்துக் கொத்தாக மலர்ந்து விரிந்த பூக்கள் சூடிய கூந்தலுடைய நப்பின்னையின் மார்பில்,தலை வைத்து கண் உறங்குபவனே! மலர் மாலை சூடிய கண்ணனே !எங்களுடன் வாய் திறந்து பேசுவாயாக !
மை தீட்டிய பெரிய கண்களை உடைய நப்பின்னையே!சிறிது நேரம் கூட அவனை விட்டு,படுக்கையில் இருந்து துயில்எழ மறுக்கிறாய்.க்ஷண  நேரம் கூட உன்னால் அவனைப் பிரிய முடியவில்லை என்பது எங்களுக்குத் தெரிகிறது. நீ இப்படிச் செய்வது நியாயம் அன்று ! உன் சுபாவத்துக்கு தகுதியானதும் அன்று.