கிருஷ்ணனுக்குக் கைங்கர்யம் செய்துகொண்டு பசுக்களைக் கறப்பதையும் மறந்து அவனைப் பிரியாதிருக்கும் அவனுக்குப் பிரியனான தங்கையை உறக்கத்திலிருந்து எழுப்புகிறார்கள்.
“இளம் கன்றுகளையுடைய எருமைகள் பால் கறப்பவர் இல்லாமையால் முலைக்கடுப்பால் கதறி, கனைத்து ஏங்குகின்றன. உனது அண்ணன் எருமைகளைக் கரவாவிட்டால் அவை என்ன பாடுபடுகின்றன. அந்த அளவு படுகின்றோம். நீ முகம் காட்டாமையாலே,” என்பதை உணர்த்த எருமைகளின் கதறலைக் குறிப்பிடுகின்றார்கள். பின்னர் எருமைகள் தமது இளம் கன்றுகளை எண்ணி நிற்கின்றன. எண்ணிய அளவிலேயே காம்புகள் வழியே பால் சொரிகின்றன. பாலின் மிகுதியால் வீடெங்கும் சேறாகி நிற்கும். அத்தகைய செல்வனின் வீட்டுத் தங்கையே !
பனித்துளிகள் எங்கள் தலையில் விழ நாங்கள் உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறோம். சீதையைக் கவர்ந்த லங்காபுரிக்கு அரசனான ராவணனைக் கொன்றொழித்தவனும், சிந்தனைக்கு இனியவனுமான பெருமானைப் புகழ்ந்து பாடுகிறோம். இதை கேட்டும் நீ வாய்திறவாமல் தூங்குவதை எல்லா வீட்டினரும் அறிந்துவிட்டார்கள். இதனால் உனக்கு வரும் மதிப்பை அனைவரும் அறியவேண்டுமென்று கிடக்கிறாயாகில், அங்ஙனம் அறிந்தும் ஆயிற்று. இதென்ன அளவிலாத்தூக்கம்?? நீ விரைவாக எழுந்து வருவாயாக!” என்கிறார்கள்.