நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
இந்தப் பாசுரத்திலும் உறங்கிக்கொண்டிருக்கின்ற பெண்ணை நோன்பு நோற்பதன் பொருட்டு எழுப்புகிறாள் கோதைநாச்சியார். முற்பிறவியில் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, சொர்க்கம் போல் சுகத்தை தற்போது அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவைத் திறக்காவிட்டாலும் பரவாயில்லை. எங்களுடன் பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியைத் தலையில் அணிந்த நம் நாராயணனை போற்றிப் பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனைத் தூக்கத்திற்கு எடுத்துக்காட்டாகச் சொல்வார்கள். நீள்நிலை கொண்ட உனது உறக்கத்தை நோக்கின் நீ அவனையும் தோற்கடித்து அதற்குப் பரிசாக கும்பகர்ணன் தன்னுடைய தூக்கத்தை உன்வசம் கொடுத்துச் சென்று விட்டான் போல் தெரிகிறது. அந்த அளவிற்கு.. உன்னுடைய தூக்கம் பெரும் துயிலாக இருக்கிறதே. மிகுந்த சோம்பலும் தூக்கமும் உடையவளே! எங்களுக்கு அணி போன்றவளே! உறக்கநிலை தெளிந்து, கதவைத் திறப்பாயாக!